ஈஸா நபியிடம் மறுமையில் விசாரிப்பது.
5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்" என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் (மறுமைநாளில்) கேட்கும்போது, (அதற்கு) அவர் "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்: என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறியமாட்டேன்: நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று கூறுவார்.
5:117. "நீ எனக்கு கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), 'என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!' என்பதைத் தவிர, வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர், நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய்; நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);
5:118. "(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்துவிடுவாயானால் நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறுவார்).
5:119. அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு - அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்" என்று கூறுவான்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக்கொண்டார்கள் - இது மகத்தான (பெரும்) வெற்றியாகும்.
5:120. வானங்கள், பூமி மற்றும் அவற்றில் இருப்பவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றல் உடையோன் ஆவான்.
Comments
Post a Comment