மூஸா,கிளிர் அலை அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி al quran 18:60

 122. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ. فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَامَ مُوسَى النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ. فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ. قَالَ يَا رَبِّ وَكَيْفَ بِهِ فَقِيلَ لَهُ احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ فَإِذَا فَقَدْتَهُ فَهْوَ ثَمَّ، فَانْطَلَقَ وَانْطَلَقَ بِفَتَاهُ يُوشَعَ بْنِ نُونٍ، وَحَمَلاَ حُوتًا فِي مِكْتَلٍ، حَتَّى كَانَا عِنْدَ الصَّخْرَةِ وَضَعَا رُءُوسَهُمَا وَنَامَا فَانْسَلَّ الْحُوتُ مِنَ الْمِكْتَلِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا، فَانْطَلَقَا بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمِهِمَا فَلَمَّا أَصْبَحَ قَالَ مُوسَى لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى مَسًّا مِنَ النَّصَبِ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ. فَقَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ إِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ ـ أَوْ قَالَ تَسَجَّى بِثَوْبِهِ ـ فَسَلَّمَ مُوسَى. فَقَالَ الْخَضِرُ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ فَقَالَ أَنَا مُوسَى. فَقَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ. قَالَ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ أَنْتَ، وَأَنْتَ عَلَى عِلْمٍ عَلَّمَكَهُ لاَ أَعْلَمُهُ. قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا، وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ لَيْسَ لَهُمَا سَفِينَةٌ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، فَكَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمَا، فَعُرِفَ الْخَضِرُ، فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ، فَجَاءَ عُصْفُورٌ فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ فِي الْبَحْرِ. فَقَالَ الْخَضِرُ يَا مُوسَى، مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ كَنَقْرَةِ هَذَا الْعُصْفُورِ فِي الْبَحْرِ. فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ. فَقَالَ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ. فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا. فَانْطَلَقَا فَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ، فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ مِنْ أَعْلاَهُ فَاقْتَلَعَ رَأْسَهُ بِيَدِهِ. فَقَالَ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ـ قَالَ ابْنُ عُيَيْنَةَ وَهَذَا أَوْكَدُ ـ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا، فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ. قَالَ الْخَضِرُ بِيَدِهِ فَأَقَامَهُ. فَقَالَ لَهُ مُوسَى لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا. قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ "". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَوَدِدْنَا لَوْ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا "".

பாடம் : 44 ஓர் அறிஞரிடம் “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டால், “இதைப் பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என இறைவனிடம் சாட்டிவிடுவதே நன்று.

122. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(‘களிர்’ (அலை) அவர் களைச் சந்தித்த) மூசா, இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா அல்லர். அவர் வேறொரு மூசா” என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பகாலீ என்பவர் கூறுகிறாரே?’ என்று கேட்டேன்.28


அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறை விரோதியான அவர் பொய்யுரைத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்றார்கள்:


(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே நின்று உரையாற்றியபோது அவர்களிடம், “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் “(நான் அறிந்தவரையில்) நானே மிகவும் அறிந்தவன்” என்று பதிலளித்துவிட்டார்கள்.


ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், “(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் “(இல்லை) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று மூசா (அலை) அவர்களுக்கு அறிவித்தான்.


மூசா (அலை) அவர்கள், “என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?” என்று கேட்டார்கள். அதற்கு, “கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக்கொண்டு (அப்படியே கடலோரமாக நடந்து) செல்லுங்கள். நீங்கள் அம்மீனை எங்கு தொலைத்துவிடுகிறீர்களோ அங்குதான் அவர் இருப்பார்” என்று அவர்களிடம் கூறப்பட்டது.


அவ்வாறே மூசா (அலை) அவர்கள் (தம்முடன்) தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பவரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். இருவரும் (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்த) ஒரு பாறைக் கருகில் வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர்.


கூடையிலிருந்த மீன் (உயிராகி) மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது. இது, மூசா (அலை) அவர்களுக் கும் அவர்களுடைய உதவியாளருக்கும் வியப்பாய் அமைந்தது. (மீன் தவறிப் போனதைக் கூற உதவியாளர் மறந்துவிட்டார்.)


இந்நிலையில் அன்றைய மீதிப்பொழுதிலும் இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர். மறுநாள் பொழுது விடிந்தபோது, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் “நமது காலைச் சிற்றுண்டியை கொண்டுவாரும். நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்றார்கள். தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைக் கடக்கும்வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை.


அவர்களுடைய உதவியாளர், “நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே, பார்த்தீர்களா? அங்குதான் நான் அந்த மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன் (அதை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். அவ்விடத்தில் அது, கடலில் செல்ல விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக்கொண்டது)” என்றார். மூசா (அலை) அவர்கள், “நாம் தேடி வந்த இடம் அதுதான்” என்று கூறினார்கள்.


பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்தபோது அங்கு ‘தம்மை முழுவதுமாக ஓர் துணியால்’ அல்லது ‘தமது ஆடையால்’ தம்மைப் போர்த்தியபடி ஒருமனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு முகமன் (சலாம்) சொல்ல, அம்மனிதர், “உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்?)” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள்.


அம்மனிதர், “இஸ்ரவேலர்களின் (இறைத் தூதரான) மூசாவா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, “உங்களுக்கு (இறைவனால்) கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.


அதற்கு களிர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது. மூசா! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று கூறினார்கள்.


அதற்கு மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்றார்கள்.


(முடிவில் மூசா, களிர் ஆகிய) இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால், கடற்கரையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் (தங்களது மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர்.


அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது (மூசா (அலை) அவர்களிடம்) களிர் (அலை) அவர்கள், “மூசாவே! உமது அறிவும் எனது அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில்தான் உள்ளது” என்று கூறினார்கள்.


(சற்று நேரம் கழிந்ததும்) களிர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடிப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் “நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமலேயே ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்திவிட்டீர்களே? அதில் உள்ளவர்களை (நீரில்) மூழ்கடிக்கவா?” என்று கேட்டார்கள்.


அதற்கு களிர் (அலை) அவர்கள், “என்னுடன் உங்களால் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘நான் மறந்துபோனதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.


-(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினால் ஆகும்.-


(பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து வெளியேறி கடலோரமாக) நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவன் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். களிர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் தமது கையால் திருகி தனியே எடுத்துவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், “ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்துவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே?” என்று கேட்டார்கள்.


அதற்கு களிர் (அலை) அவர்கள், “நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள்.


-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(ம்முறை களிர் (அலை) அவர்கள் கூறிய)து, முதல் முறை கூறியதைவிடக் கூடுதலான அழுத்தம் கொண்டதாகும்.-


மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள். இறுதியில் ஒரு கிராமத்துக்கு வந்தார்கள். அக்கிராம மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால்,


அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில்


அவ்வூரில் (சாய்ந்தபடி) கீழே விழலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள்.


(அதைக் கண்ட) களிர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக்கொண்டிருக்கலாமே!” என்றார்கள்.


களிர் (அலை) அவர்கள், ‘’இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்” என்று கூறினார்கள்.


(இந்த நிகழ்ச்சியை கூறி முடித்தபின்) நபி (ஸல்) அவர்கள், “மூசா பொறுமை யாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்கள் (அல்லாஹ்வின் மூலம்) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்” என்று சொன்னார்கள்.29

Comments