பகராவின் ஆதம் நபி வரலாறு 10 வசனம்

 2:30. (நபியே!) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி, "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப்போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) அதில் குழப்பத்தை உண்டாக்கி இரத்தம் சிந்தக்கூடியவரையா நீ அமைக்கப்போகிறாய்? இன்னும், நாங்களோ உன் புகழைக்கொண்டு உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றுபவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன், "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.


2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக்கொடுத்தான்; பின், அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" என்றான்.


2:32. அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன்; நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே அறிந்தவன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.


2:33. "ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு அறிவித்தபோது, "நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன்; நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்துக் கொண்டு இருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான்.


2:34. பின்னர், நாம் வானவர்களை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் பணிந்தனர்; அவன் மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும், அவன் நிராகரிப்போரைச் சார்ந்தவனாகிவிட்டான்.


2:35. மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவனபதியில் குடியிருங்கள்; மேலும், நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாகப் புசியுங்கள்; ஆனால், நீங்கள் இருவரும் இம்மரத்தை நெருங்கவேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்,) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.


2:36. இதன் பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழிதவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த (சொர்க்கத்திலிருந்து) வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் சுகம் அனுபவிப்பதும் உண்டு" என்று கூறினோம்.


2:37. பின்னர், ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக் கோரினார்;) எனவே, இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.


2:38. (பின்பு) நாம் சொன்னோம்: "நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."


2:39. "அன்றி, யார் (இதை ஏற்க) மறுத்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கியிருப்பர்."

Comments