அல்லாஹ்வின் அறிவுரை,சவால்,எச்சரிக்கை

 2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்.


2:22. அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதிலிருந்து உங்கள் உணவிற்காக கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; நீங்கள் அறிந்துகொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

2:23. இன்னும், (முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மையாளர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

2:24. அப்படி நீங்கள் செய்யாவிட்டால் - அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக்கொள்ளுங்கள்; நிராகரிப்போர்க்கு அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:25. ஆனால், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு அங்கிருந்து ஏதாவது கனி உணவாகக் கொடுக்கப்படும்போதெல்லாம், "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால், இதே தோற்றமுடையதுதான் அவர்களுக்கு (உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும், அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும், அவர்கள் அங்கே நிரந்தரமாக இருப்பார்கள்.

2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான்; நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள்; ஆனால், நிராகரித்தவர்களோ "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று கூறுகிறார்கள்; அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும், பலரை இதன் மூலம் நேர்வழி பெறச்செய்கிறான்; ஆனால், தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்), அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.

2:27. இத் தீயவர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிபடுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர்; அல்லாஹ் ஒன்றிணைக்கப்படவேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன், பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.


Comments