செல்வம் தொடர்பாக சேர்த்து வைக்க கூடாது என்பது பற்றி
புஹாரி
1406. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மதீனாவுக்கு அருகில் உள்ள) ‘ரபதா’ எனுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூதர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தபோது, ‘யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யா மல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனம் (அருளப்பெற்ற காரணம்) தொடர்பாக, நானும் முஆவியா (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டோம்.
முஆவியா (ரலி) அவர்கள், “இது வேதக்காரர்கள் தொடர்பாக அருளப் பெற்றது” என்றார்கள். நானோ “நம்மையும் அவர்களையும் குறித்தே அருளப்பெற்றது” என்றேன். எனவே, எனக்கும் முஆவியா வுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும், உஸ்மான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார்கள். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்குமுன் என்னைப் பார்க்காதவர்கள் போல என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவுக்கு அழைக்கப் பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள்.
நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான் (ரலி) அவர்கள், “நீர் விரும்பினால் தனியாக (மதீனாவுக்கு) அருகில் எங்கேனும் இருந்துகொள்ளும்!” என்று கூறினார்கள். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. எனக்கு ஒரு அபிசீனியர் (கறுப்பர்) தலைவராக இருந்தாலும் அவருக்கு நான் செவிதாழ்த்திக் கட்டுப்படுவேன்” என்று கூறினார்கள்
Comments
Post a Comment