2:6. நிச்சயமாக நிராகரிப்போரை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்; இன்னும், அவர்களின் பார்வை மீது திரை இருக்கிறது; மேலும், அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
2:8. இன்னும், மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்கிறோம்" என்று கூறுவோரும் இருக்கின்றனர்; ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கிறார்கள்; ஆனால், அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும், அவர்கள் (இதை) உணர்ந்துகொள்ளவில்லை.
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்; மேலும், அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையுமுண்டு.
2:11. "பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், "நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே" என்று அவர்கள் சொல்கிறார்கள்.
2:12. அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள்; ஆனால், அவர்கள் இதை உணரமாட்டார்கள்.
2:13. (மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், "மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?" என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல!) இவர்களே மூடர்கள்; ஆயினும், (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:14. இன்னும், நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது, "நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள்.
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான்; இன்னும், இவர்களின் வழிகேட்டிலேயே தடுமாறுபவர்களாக இவர்களை விட்டுவிடுகிறான்.
2:16. இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிக்கேட்டைக் கொள்முதல் செய்துகொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும், இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம்: நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது; அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும், பார்க்க முடியாத இருள்களில் அவர்களை விட்டுவிட்டான்.
Comments
Post a Comment