இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
(அல்குர்ஆன் : 2:47)
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:48)
உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
(அல்குர்ஆன் : 2:49)
மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
(அல்குர்ஆன் : 2:50)
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:51)
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
(அல்குர்ஆன் : 2:52)
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
(அல்குர்ஆன் : 2:53)
Comments
Post a Comment