மூஸாவுக்கு பின்பு மக்களுக்கு நபிமார்களை கொடுத்து அதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த வேலை
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
(அல்குர்ஆன் : 5:20)
(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
(அல்குர்ஆன் : 5:21)
அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 5:22)
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.
(அல்குர்ஆன் : 5:23)
அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 5:24)
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
(அல்குர்ஆன் : 5:25)
(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 5:26)
Comments
Post a Comment