முஹ்மீன்களின் நண்பர்கள் அநியாயம் பண்ணுகிறவர்களாக இருக்கக்கூடாது
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
(அல்குர்ஆன் : 5:51)
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 5:52)
(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
(அல்குர்ஆன் : 5:53)
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:54)
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
(அல்குர்ஆன் : 5:55)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
(அல்குர்ஆன் : 5:56)
முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 5:57)
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
(அல்குர்ஆன் : 5:58)
Comments
Post a Comment