ஹஜ் நிறைவேற்றுவது
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்திசெய்யுங்கள், (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) பலிப் பிராணிகளில் (உங்களுக்கு) சாத்தியமானது (அதற்குப் பகரமாகும்); அந்தப் பலிப்பிராணி தனது இடத்தை அடைவதற்குமுன் உங்கள் தலை முடிகளை மழிக்காதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது அவருடைய தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடியதோ இருந்தால், (தலை முடியை இறக்கிக்கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும்; அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்; அல்லது பலி கொடுத்தல் வேண்டும்; பின்னர் (பகைவர் பற்றிய அச்சம், நோய் போன்ற தடைகளை விட்டும்) அபயமுடையவர்களாக நீங்கள் ஆகிவிட்டால், (மக்கா சென்றபின், உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு, ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்துவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலிப்பிராணியிலிருந்து எது இயலுமோ அது அவரின் மீ(து கடமையான)தாகும்: (அவ்வாறு பலி கொடுக்கும் வசதியைப்) பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்றல் வேண்டும்; இவை முழுமையான பத்தாகும்; இ(ந்தச் சலுகையான)து எவருடைய குடும்பம் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் - ஆகவே, அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை (தம்மீது) கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜி(ன் காலத்தி)ல் உடலுறவு கொள்ளுதல், கெட்டவார்த்தைகள் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது; நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதனை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்; மேலும், (ஹஜ்ஜுக்குத் தேவையானவற்றை) சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகச்சிறந்தது இறையச்சமே ஆகும்; எனவே அறிவுடையோரே! என்னையே பயந்துகொள்ளுங்கள்.
2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளைத் தேடிக்கொள்வது (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள்மீது குற்றமாகாது; பின்னர், அரஃபாவிலிருந்து திரும்பும்போது "மஷ்அருல் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதுபோல் அவனை நீங்கள் நினைவுகூருங்கள்; நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:200. ஆகவே, உங்களுடைய (ஹஜ்) கிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்தது போல், அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்; மனிதர்களில் சிலர், "எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு" என்று கூறுகிறார்கள்; அதனால், அவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை.
2:201. "எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையை அளிப்பாயாக! இன்னும், எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காப்பாயாக!" எனக் கூறுவோரும் அவர்களில் உள்ளனர்.
2:202. இவ்வாறு, (இம்மை, மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்கு உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
2:203. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்; எவரும் (மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால், அவர்மீது குற்றமில்லை; யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாரோ அவர்மீதும் குற்றமில்லை, (இது இறைவனை) அஞ்சிக்கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment