நோன்பும்,நோன்பின் விதிமுறையும்

 நோன்பும்,நோன்பின் விதிமுறையும் 


2:183. நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.


2:184. (இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்; எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்; எனினும், எவரேனும் உபரியாக நன்மைசெய்தால் அது அவருக்கு நல்லது – ஆயினும், நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.


2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கவேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பை) மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறான்; உங்களுக்குச் சிரமமானதை அவன் நாடவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).


2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும்; அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக!


2:187. நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நிச்சயமாக நீங்கள் உங்களையே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்: அவன் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்று, உங்களை விட்டும் (அப்பாவத்தை) மன்னித்துவிட்டான்; எனவே, இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள்; இன்னும், அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவுவரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும், நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அவற்றை (மீற) நெருங்காதீர்கள்; (தன்னை) அஞ்சுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய சான்றுகளை மனிதர்களுக்குத் தெளிவாக்குகின்றான்.

2:188. அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே மக்களின் பொருள்களிலிருந்து ஒரு பகுதியை அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

Comments