கொலை செய்வது பற்றியும், குழப்பம் செய்வது பற்றியும்

 கொலை செய்வது பற்றியும், குழப்பம் செய்வது பற்றியும்.


இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் : 5:32)


அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன் : 5:33)


நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் : 5:34)


முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.

(அல்குர்ஆன் : 5:35)


நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா; மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் : 5:36)


அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.

(அல்குர்ஆன் : 5:37)

Comments