வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்
3:110. மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்,) நீங்கள் நல்லதை(ச் செய்ய) ஏவுகிறீர்கள்; தீயதைவிட்டும் தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப்போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும்; அவர்களில் நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர்; எனினும், அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
3:111. இத்தகையோர் உங்களுக்குச் (சிறிது) தொல்லைத் தருவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிடவே முடியாது; அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; பின்னர், அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
3:112. அவர்கள் எங்கிருப்பினும் அவர்கள்மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்வின் ஒப்பந்தத்தைக் கொண்டும், மனிதர்களின் ஒப்பந்தத்தைக் கொண்டுமேயன்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர்கள் ஆளானார்கள்; ஏழ்மையும் அவர்கள்மீது விதிக்கப்பட்டுவிட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், உரிமையின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் இருந்தார்கள்; இன்னும், அவர்கள் பாவம் செய்து கொண்டும், வரம்பு மீறிக் கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
3:113.(எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 3:113).
3:114. அவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள், தீமையைவிட்டும் தடுக்கிறார்கள்; மேலும், நன்மையானவற்றில் விரைகின்றனர்; இவர்களே நல்லவர்களில் உள்ளோராவர்.
3:115. இவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதற்காக (நற்கூலி வழங்கப்படுவதிலிருந்து) மறுக்கப்படவே மாட்டார்கள்; தன்னை அஞ்சுவோரை அல்லாஹ் நன்கறிகிறான்.
Comments
Post a Comment