கொலைக்கு தீர்ப்பும்,மரண சாசனமும்
2:178. நம்பிக்கை கொண்டோரே! கொலைக்காகப் பழிதீர்ப்பது உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது - சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண்; இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனால் (ஆகிய கொலையுண்டவனின் வாரிசுகளால்) ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப்பெறும் நஷ்டஈட்டை) பெருந்தன்மையுடன் அவன்பால் செலுத்திவிட வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்புமீறுகிறாரோ, அவருக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
2:179. அறிவுடையோரே! (கொலைக்குப்) பழி வாங்குவதில் உங்களுக்கு வாழ்வுண்டு; (இத்தகைய குற்றம் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளிலிருந்து) காத்துக்கொள்ளலாம்.
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி மரண சாஸனம் செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இது) இறையச்சமுடையோர் மீது கடமையாகும்.
2:181. எனவே, அதனை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால் நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள்மீதே சாரும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான்.
2:182. ஆனால், மரண சாஸனம் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) அநீதியையோ அல்லது பாவத்தையோ அஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான்.
Comments
Post a Comment