நம்பிக்கை கொண்டவர்கள் கூறுவதும் வார்த்தை,தர்க்கம் செய்பவர்கள் பற்றியும்

நம்பிக்கை கொண்டவர்கள் கூறுவதும் வார்த்தை,தர்க்கம் செய்பவர்கள் பற்றியும் 


 2:136. "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும், நாங்கள் அவனுக்கே வழிப்படுகிறோம்" என்று (நம்பிக்கை கொண்டோரே!) நீங்களும் கூறுங்கள்.


2:137. ஆகவே, நீங்கள் நம்பிக்கை கொண்டதைப் போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேர்வழியைப் பெற்று விடுவார்கள்; ஆனால், அவர்கள் புறக்கணித்து விட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர்; எனவே, அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உமக்குப் போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கின்றான்.


2:138. "அல்லாஹ்வின் (மார்க்கமாகிய இவ்) வர்ணத்தை (நீங்கள் பற்றிப் பிடியுங்கள்); வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகின்றோம்" (எனக் கூறுவீர்களாக)!


2:139. "அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கே; உங்கள் செயல்கள் உங்களுக்கே. மேலும், நாங்கள் (யாருக்கும் இணைவைக்காது) அவனுக்கே கலப்பற்றவர்களாக இருக்கின்றோம்" என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக!

Comments