மறுமை நாளின் அடையாளங்கள்

 மறுமை நாளின் அடையாளங்கள் 


இரண்டாவது ஃபித்னாவிற்கு காரணமானவர்கள்:


  குழப்பம் எங்கிருந்து, யாரிடமிருந்து தோன்றும் என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்...


இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!' என்றார்கள். மக்கள், '(இராக் திசையில் அமைந்த) எங்கள் 'நஜ்த்' பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்கள்)' என்று கேட்க, (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக! எங்கள் யமன் நாட்டில் சுபிட்சத்தை வழங்குவாயாக!' என்றே பிரார்த்தித்தார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் 'நஜ்த்' பகுதியிலும் (சுபிட்சம் வழங்கும்படி பிரார்த்தியுங்களேன்)' என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், - மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன் - அங்கு தான் நில நடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்" என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரி : 7094)


ஆரம்பத்தில் நஜ்த் மக்கள் இன்றைய ரியாத் நகரில் தங்கியிருந்தனர். அதன் பிறகு, அவர்கள் பல ஊர்களிலும் பரவி விட்டனர். குறிப்பாக, அவர்களில் பலர் ஈராக்கில் குடியேறினர். இதற்கான ஆதாரம்...


இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபா,பஸ்ரா எனும்) இந்த இரு(இராக்-)நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்டபோது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி(ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்குக் கர்ன் எனும் இடத்தை (இஹ்ராம் கட்டும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். நாங்கள் (மக்காவிற்கு) செல்லும் பாதை அதுவன்று, நாங்கள் கர்ன் வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும்" என்றனர். அதற்கு உமர் (ரலி)அவர்கள், "அந்த அளவு தொலைவுள்ள ஓரிடத்தை உங்களது பாதையிலே கூறுங்கள்" என்றார்கள். பின்பு தாத்துல் இர்க் என எல்லை நிர்ணயித்தார்கள்.

(ஸஹீஹ் புகாரி : 1531)


உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நஜ்த்வாசிகளில் பலர் ஈராக்கில் குடியேறியதால்தான் அவர்களுக்கு எங்கிருந்து இஹ்ராம் கட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை குறித்து கலீஃபாவிடம் கேட்டுள்ளனர். இதன் மூலம் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே நஜ்த்வாசிகள் மதீனாவின் கிழக்குப்பகுதியான ஈராக்கில் குடியேறி விட்டனர் என்பது உறுதியாகிறது. அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கிழக்குப் பகுதியை நோக்கி கைகாட்டி அங்கிருந்துதான் குழப்பம் தோன்றும் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் அந்த குழப்பங்களை உருவாக்கும் மக்கள் எந்த கோத்திரத்தை (பிரிவை) சேர்ந்தவர்கள் என்பதையும் நபியவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்..


அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள், 'இறைநம்பிக்கை இங்கேயுள்ளது' என்று தம் கையால் யமன் நாட்டின் பக்கம் சைகை காட்டிக் கூறினார்கள். மேலும், 'கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபவாமும்) ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும. அங்கிருந்து தான் ஷைத்தானின் இரண்டு கொம்புகளும் உதயமாகும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்" என்று கூறினார்கள். 

(ஸஹீஹ் புகாரி : 4387)


ரபீஆ மற்றும் முளர் பிரிவினரே அனைத்து வித குழப்பங்களுக்கும் காரணமானவர்களாக இருக்கின்றனர். இந்த இரு கோத்திரத்தினரை பற்றியும் அவர்களின் அடையாளங்கள், குணங்களை பற்றியும் ஏற்கனவே நாம் 'அத்தாபூத் எனும் பேழை' - மூன்றாம் பாகத்தில் பார்த்துள்ளோம்.


இந்த இரு கோத்திரத்தினரும் கல்மனம் கொண்ட சுயநலக்காரர்கள்... பேராசை, பொறாமை போன்ற குணங்களைக கொண்டவர்கள். எனவே அவர்களின் இத்தகைய குணங்கள் காரணமாக பூமியில் பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சமுதாயத்தில் ஏற்படுகின்ற பிரிவினைகளுக்கு காரணமானவர்களே இவர்கள்தான்!


உஸ்மான்(ரலி) அவர்களின் கொலைக்கு பிறகான முதல் ஃபித்னாவின்போதும், இந்த இரு கோத்திரத்தினர்தான் முன்னணியில் நின்றார்கள்.

முஆவியா(ரலி) அவர்களை பின்னாடியிருந்து தூண்டி விட்டு , கலீஃபாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க வைத்தவர்கள் முளர் கோத்திரத்தினர் ஆவார்கள். அவர்களே முஆவியா(ரலி) அவர்களின் உற்ற நண்பர்களாக அப்போது இருந்தனர். யஜீது ஆட்சித்தலைவராக ஆன போதும் அந்த முளர் கோத்திரத்தினரே யஜீதின் அமைச்சரவையில் இருந்து அதிகாரம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர்.


அதேபோல், கலீஃபா அலீ(ரலி) அவர்களின் படையில் இருந்தாலும், கலீஃபாவுக்கு ஒழுங்கான முறையில் கட்டுப்படாமல் , ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டவர்களே ரபீஆ கோத்திரத்தினர் ஆவார்கள். அந்த மக்கள் மூலமாகவே இமாம் ஹஸன்(ரலி) அவர்களும் பல சிரமங்களை அனுபவித்தார்கள்.


இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட இந்த இரு கோத்திரத்தினரே இஸ்லாமிய சமுதாயத்துல் ஏற்பட்ட இரண்டாவது ஃபித்னாவிற்கும் முழு முதற்காரணமாக இருந்தனர்.


யஜீது அவர்கள் ஆட்சித்தலைவராக பதவியேற்றதை மதீனா மக்கள் பலர் விரும்பவில்லை. என்றாலும், வேறு வழியின்றி யஜீதுக்கு பைஅத் செய்து விட்டனர். ஆனால் இமாம் ஹுஸைன்(ரலி) மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ஆகிய இருவர் மட்டும் யஜீதுக்கு பைஅத் செய்வதை அறவே வெறுத்தனர்.


யஜீதின் அமைச்சரவையில் இருப்பவர்கள் அனைவரும் கல்மனம் கொண்ட முரடர்கள். யஜீதை பொம்மைத் தலைவராக்கி அந்த முரடர்களே அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். அந்த முரடர்கள் சொல்லும் ஆரோசனைக்கேற்ப செயல்படுபவராகவே யஜீத் இருக்கிறார். எனவே போதிய கல்வி ஞானம் இல்லாத தகுதியற்ற ஒரு தலைவருக்கு பைஅத் செய்வதை இமாமவர்கள் விரும்பவில்லை.


அந்த சூழ்நிலையில்தான் , ஈராக் மக்களின் மூலமாக ஃபித்னா உருவாகத் தொடங்கியது.

ஈராக் மக்களை பொறுத்த வரை தங்களிடமே ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்! அதனால்தான் அவர்கள் ஆரம்பத்திலேயே கலீஃபா அலீ(ரலி) அவர்களுக்கு செய்த உதவியில் கூட ஆதாயத்தை தேடிக் கொண்டனர்.


உஸ்மான்(ரலி) அவர்களின் கொலைக்கு பழி தீர்க்க வேண்டும் என்று கூறி ஆயிஷா(ரலி) அவர்கள் போர்க்கொடி தூக்கியபோது, அவர்களை கட்டுப்பட வைக்க நடந்த அல் ஜமல் போரில் அலீ(ரலி) அவர்களுடன் ஈராக் மக்களே பங்குக் கொண்டனர். அதற்கு பகரமாக, அலீ(ரலி) அவர்கள் கூஃபா நகர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி தங்களுடைய தலைநகரத்தை கூஃபாவுக்கு மாற்றிக் கொண்டார்கள். அதே சமயம், சிரியாவில் இருந்த முஆவியா(ரலி) அவர்களை கட்டுப்பட வைக்கும் முயற்சிக்கு கூஃபாவில் இருப்பதே அலீ(ரலி) அவர்களுக்கும் வசதியாக இருந்தது.


இவ்வாறு அஹ்லுல் பைத்தை சேர்ந்தவர்கள் மூலமாக கூஃபா நகரமே முஸ்லிம்களின் தலைநகரமாக இருந்து வந்தது.

அதன் பின், பனூ உமய்யாக்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றதும் சிரியா நகரமானது இஸ்லாமியர்களின் தலைநகரமாக மாறியது.


முஆவியா(ரலி) அவர்களிடம் ஆட்சி அதிகாரம் சென்றதை ஈராக்வாசிகள் விரும்பவில்லை என்றாலும், இமாம் ஹஸன்(ரலி) அவர்கள் எடுத்த இறுதி முடிவாக அது இருந்ததாலும், முஸ்லிம்களின் ஒற்றுமையைக் காரணம் காட்டி அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்ததாலும், ஈராக்வாசிகளால் முஆவியா(ரலி) ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடியவில்லை.


ஆனால் முஆவியா(ரலி) அவர்களுக்கு அடுத்ததாக யஜீத் பதவியேற்றதுமே , ஈராக்வாசிகள் யஜீதின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.

அந்த எதிர்ப்பில் வெற்றிப்பெற அஹ்லுல் பைத்தை சேர்ந்த இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களின் உதவி தேவையென்பதால், ஏகப்பட்ட கடிதங்களை இமாமவர்களுக்கு தொடர்ந்து அனுப்பத் தொடங்கினர்.


அந்த கடிதங்களில் உண்மைக்கு மாற்றமாக பல தகவல்களை கூறியிருந்தனர்.. அதாவது அவர்கள் யஜீது ஆட்சியில் ரொம்ப கொடுமைகள் அனுபவிப்பதாக எழுதினர்.

எனவே தங்களுக்கு உதவுமாறு இமாமவர்களுக்கு பல கடிதங்கள் மூலம் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தனர். அவ்வாறு அங்கு இமாமவர்கள் சென்றால், கூஃபா மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இமாமவர்களுக்கு பக்கபலமாக நிற்பதாக வாக்குறுதி அளித்தனர்.


இவ்வாறு ஒரு ஊரில் வசிக்கக்கூடிய மக்கள்  துன்பங்களை அனுபவிப்பதாகவும், தங்களுக்கு உதவுமாறும் இமாமவர்களுக்கு தொடர்ந்து அழைப்புக் கொடுக்கும் சூழ்நிலையில் அந்த அழைப்பை எவ்வாறு இமாமவர்களால் புறக்கணிக்க முடியும்?


இமாமவர்கள் மேல் அக்கறை கொண்ட பல ஸஹாபாக்கள் இமாமவர்களை ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். "ஈராக் மக்கள் சுயநலம் பிடித்த மோசமானவர்கள். நீங்கள் அங்கு சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்தாகி விடும்" என்று கூட அவர்கள் இமாமவர்களிடம் கூறி தடுக்க பார்த்தனர்.

ஆனால் தன்னுடைய உயிரை பெரிதென எண்ணி, அதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக செல்லாமல் இருப்பது சுயநலம் என்று நினைத்ததால்தான், அவர்களின் பேச்சை கேட்காமல் இமாமவர்கள் துணிந்து ஈராக்கை நோக்கி பயணப்பட்டார்கள்.


ஆனால் ஈராக் மக்களோ தங்களுடைய சுயநல புத்தியை காட்டினர். இமாமவர்களை ஈராக்கிற்கு வரவழைத்து, அவரை கல்மனம் கொண்ட எதிரிகள் முன் நிறுத்திய அவர்கள், இமாமவர்களுக்கு பக்கபலமாக இருக்காமல், தங்களுடைய உயிரை காத்துக் கொள்ள அவரவர் வீடுகளில் இருந்துக் கொண்டனர்.


 மக்காவில் இருந்த இமாமவர்களை அங்கேயே அமைதியாக வாழ விடாமல், ஏகப்பட்ட கடிதங்கள் மூலம் அவர்களை ஈராக்கிற்கு வரவழைத்து, எதிரிகள் முன் நிறுத்திய ஃபித்னாக்காரர்களே ஈராக் மக்களாவார்கள்.. அவர்களே நஜ்த்வாசிகளான சுயநலம் எனும் தீய குணத்தை கொண்ட ரபீஆ கோத்திரத்தினர்!

இமாமவர்களை கொலை செய்த பாதகர்களோ கல்மனம் கொண்ட முளர் கூட்டத்தினர் ஆவார்கள்!


இவ்வாறு இந்த இரு கோத்திரத்தினரும் இமாமவர்களின் கொலையில் சரிசமமாக பங்குக் கொண்டவர்களே ஆவார்கள்.

ஆனால், அந்த ரபீஆ கோத்திரத்தினரின் சந்ததிகளான ஷியாக்களோ , பாதி உண்மையை மறைத்து, இன்றுவரை யஜீதை மட்டுமே கொலைகாரராக அடையாளம் காட்டி வருகின்றனர். உண்மையில் கொலைக்கான திட்டம்போட்டு கொடுத்தது யஜீது அல்ல.. இப்னு ஸியாதுதான் இமாமவர்களை கொலை செய்ய திட்டம் போட்டவனாவான்! ஆனால் அவனைக் கூட ஷியாக்கள்  பெரிதாக விமர்சிப்பதில்லை.. அந்த ஷியாக்களின் முன்னோர்களான ஈராக்வாசிகளையும் அவர்கள் குற்றவாளிகளாக பார்ப்பதில்லை.

இமாமவர்களின் கொலையில் பாதி பங்குக் கொண்ட ஈராக்வாசிகளை ஷியாக்கள் தந்திரமாக தப்ப வைக்க பார்த்தாலும், அன்று சமகாலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் ஈராக்வாசிகளையே கொலைகாரர்களாக பார்த்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு..



#அத்தாபூத்_எனும்_பேழை

Comments