மர்வான, முஆவியா ,இப்னு உமர் (ரலி)

மர்வான, முஆவியா 


புஹாரி 956. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிவாச-ல் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அங்கு அவர்கள் செய்யும் முதல்வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தம் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள்.


அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வ-யுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வ-யுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டி யதை) அவர்களுக்குக் கட்டளையிடு வார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பிவைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந் தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள்.


இவ்வாறே மக்கள் செயல்பட்டு வந்தனர்; மதீனாவின் ஆளுநராக மர்வான் பின் ஹகம் ஆகும்வரை. அவருடன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாளிலோ அல்லது நோன்புப் பெருநாளிலோ நான் (தொழச்) சென்றேன். நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் பின் ஸல்த் அவர்கள் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெருநாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப்போனார்.


உடனே நான் (முத-ல் தொழுவித்துவிட்டுப் பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிவழியை) மாற்றிவிட்டீர்கள்” என்று சொன்னேன்.


அதற்கு மர்வான், “அபூசயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறிவிட்டது” என்று சொன்னார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபியவர்களின்) நடைமுறைதான் நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “மக்கள் தொழுகை முடிந்துவிட்டால் எம(து உரை)க்காக அமர்ந்துகொண்டிருக்கமாட்டார்கள். எனவே, நான் உரையைத் தொழுகைக்கு முன்பே வைத்துக்கொண்டேன்” என்று சொன்னார்




4108. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம், “மக்களின் (அரசியல்) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்துகொண்டிருக்கிறது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலையில், அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா?”) என்று கேட்டேன்.181


அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “(நடந்துகொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப்) போய்ச் சேர்வீராக. ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீர் செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். நான் செல்லும்வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன். அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்தபோது முஆவியா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.182


அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் (ரலி) அவர்களையும் அன்னாருடைய தந்தை உமர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டு), “எவர் இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகிறாரோ அவர் தம் தலையைக் காட்டட்டும். ஏனெனில், அவரைவிடவும் அவருடைய தந்தையைவிடவும் நாமே ஆட்சிப் பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர்” என்று கூறினார்கள்.


ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:


நான் (இப்னு உமர் -ரலி) அவர்களிடம், “நீங்கள் (அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறிப் போட்டு)க்கொண்டு “(உஹுத் மற்றும் “கன்தக்' போர்களில் முஆவியாவே,) உங்களுடனும் உங்கள் தந்தை (அபூசுஃப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ (ரலி) போன்ற)வரே இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்கு உங்களைவிடத் தகுதி வாய்ந்தவர்' என்று சொல்ல நினைத்தேன்.


ஆயினும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, இரத்தம் சிந்தச் செய்துவிடும் ஒரு வார்த்தையை நான் கூறிவிடுவேனோ; நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கப்பட்டுவிடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும், சொர்க்கத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தயாரித்துவைத்துள்ளவற்றை எண்ணிப் பார்த்தேன் (அதனால் அவர்களுக்குப் பதில் கூறவில்லை)” என்று கூறினார்கள்.


அப்போது நான், “(நல்ல வேளை, நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப்பட்டீர்கள்” என்று கூறினேன்.


இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மஹ்மூத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (“கூந்தல்' என்பதைக் குறிக்க “நஸ்வாத்' எனும் சொல்லுக்குப் பதிலாக) “நவ்சாத்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது

Comments