மறுமை நாளில் யாருடைய பரிந்துரையும் பலனலிக்காது 1

 

முழுமையான ஹதீதை காண 


ஸஹீஹுல், புகாரி : 7439 லிருந்து அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடியது

 

ஸஹீஹுல் புகாரி : 7410லிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அவர்கள் அறிவிக்கக்கூடியது,


ஸஹீஹுல் புகாரி : 7510 லிருந்து மஅபத் பின் ஹிலால் அல்-அனஸீ அவர்கள் அவர்கள் அறிவிக்கக்கூடியது 


ஸஹீஹ் முஸ்லிம் : 194 a லிருந்து அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவர்கள் அறிவிக்கக்கூடியது 


பரிந்துரை குறித்த ஹதீஸைத் 3 அறிவிப்பாளர் தொடரில் உறுதிப்படுத்தியதை கூறுகிறேன்.


ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப்பட்டது.

அதில் (அவர்களுக்குப் பிடித்தமான) முன்னங்கால் பகுதி அவர்களுக்கு எடுத்துக்கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தார்கள்.

அதிலிருந்து ஒரு பகுதியைத் தமது பற்களால் கடித்துவிட்டு, பின்வரும் ஹதீதை கூறுகிறார்கள் 


அதே போன்று ஒரு சம்பவத்தில்  மஅபத் பின் ஹிலால் அல்-அனஸீ என்ற அறிவிப்பாளர்  அறிவித்தார்கள்:


பஸ்ராவைச் சேர்ந்த எங்களில் சிலர் ஒன்று கூடி அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம்.

எங்களுக்காகப் பரிந்துரை (ஷஃபாஅத்) குறித்த ஹதீஸை அவர்களிடம் கேட்பதற்காக, ஸாபித் அல்-புனானி அவர்களையும் எங்களுடன் அழைத்துச் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் தமது மாளிகையில் இருந்தார்கள்.

நாங்கள் சென்றடைந்தது அவர்களின் ளுஹா தொழுகை நேரத்துடன் ஒத்திருந்தது.


நாங்கள் உள்ளே நுழைய அனுமதி கேட்டோம்;

அவர் தமது விரிப்பில் அமர்ந்திருந்த நிலையில் எங்களை அனுமதித்தார்கள்.


நாங்கள் ஸாபித் அவர்களிடம், "முதலில் பரிந்துரை குறித்த ஹதீஸைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் கேட்காதீர்கள்" என்று (முன்கூட்டியே) கூறியிருந்தோம்.


(அவர் அனஸ் (ரலி) அவர்களிடம்), "அபூ ஹம்ஸாவே! பஸ்ராவிலிருந்து உங்கள் சகோதரர்கள் வந்துள்ளார்கள்.

பரிந்துரை குறித்த ஹதீஸைப் பற்றி உங்களிடம் கேட்பதற்காக அவர்கள் வந்துள்ளனர்" என்று கூறினார்.


அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மது (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்

                                                                                                                                                               "மறுமை நாளில் முஹம்மது நபி ஸல் அவர்களே மனிதகுலத்தின் தலைவராவார்கள்.

அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? மறுமை நாளில் அல்லாஹ், முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே மைதானத்தில் ஒன்று திரட்டுவான்.

அப்போது (ஒவ்வொரு) அழைப்பவரின் குரல் அவர்கள் அனைவருக்கும் கேட்கும்; பார்வை அவர்கள் அனைவரையும் ஊடுருவிச் செல்லும்;

சூரியன் (அவர்களுக்கு) மிக அருகில் வரும்.


அப்போது மக்கள் தங்களால் தாங்க முடியாத, சுமக்க முடியாத அளவுக்குத் துயரத்தையும் வேதனையையும் அடைவார்கள்.

அப்போது மக்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் இருக்கும் நிலையைப் பார்க்கவில்லையா? உங்களுக்கு நேர்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா?

உங்கள் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்பவரை நீங்கள் தேடமாட்டீர்களா?' என்று பேசிக்கொள்வார்கள்.


(அபு ஸைத் அல் குத்ரி ரலி அவர்கள் அறிவிக்கும் போது இந்த இடத்தில்) நங்கள் என்று கூறினார்கள்)

மக்கள் “அல்லாஹ்வின் தூதரிடம்! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருக்கும்போது சூரியனையும் சந்திரனையும் காண்பதில் நீங்கள் இடர்ப்படுகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

நாங்கள் “இல்லை” என்றோம்.

அதற்கு அவர்கள், “அவ்வாறே, அவ்விரண்டையும் காண்பதில் நீங்கள் இடர்ப்படாதது போலவே, அந்நாளில் உங்கள் இறைவனைப் காண்பதில் நீங்கள் இடர்ப்படமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.


பிறகு (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: “ஒரு அறிவிப்பாளர்,

‘ஒவ்வொரு கூட்டத்தாரும் தாங்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றுடன் செல்லட்டும்’ என்று அறிவிப்பார். 


எனவே சிலுவையை வணங்கியவர்கள் தங்கள் சிலுவையுடனும், 


சிலைகளை வணங்கியவர்கள் தங்கள் சிலைகளுடனும், 


ஒவ்வொரு தெய்வத்தை வணங்கியவர்களும் தங்கள் தெய்வங்களுடனும் செல்வார்கள். 


இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்த நல்லோர் மற்றும் தீயோர், மேலும் வேதக்காரர்களில் எஞ்சிய சிலர் மட்டும் மீதமிருப்பார்கள்.”


“பிறகு நரகம் கொண்டுவரப்படும். 

அது கானல் நீரைப் போன்று காட்சி அளிக்கப்படும். 


யூதர்களிடம், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்கப்படும். 


‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் உசைரை வணங்கிக் கொண்டிருந்தோம்’ என்பார்கள். 


அதற்கு, ‘நீங்கள் பொய் சொல்கிறீர்கள்; 

அல்லாஹ் தனக்கென மனைவியையோ, பிள்ளையையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 


உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கப்படும். 


அவர்கள், ‘எங்களுக்கு நீர் புகட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்பார்கள். 


‘குடியுங்கள்’ என்று கூறப்படும். உடனே அவர்கள் (ஒன்றன் பின் ஒன்றாக) நரகத்தில் விழுவார்கள்.”


“பிறகு கிறிஸ்தவர்களிடம், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்கப்படும். 


அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை வணங்கிக் கொண்டிருந்தோம்’ என்பார்கள். 


அதற்கு, ‘நீங்கள் பொய் சொல்கிறீர்கள்; அல்லாஹ் தனக்கென மனைவியையோ, பிள்ளையையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 


உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கப்படும். 


அவர்கள், ‘எங்களுக்கு நீர் புகட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்பார்கள். 


‘குடியுங்கள்’ என்று கூறப்படும். உடனே அவர்களும் (நரகத்தில்) விழுவார்கள்.”


“இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்த நல்லோர் மற்றும் தீயோர் மட்டும் மீதமிருப்பார்கள். 


அவர்களிடம், ‘மக்கள் சென்றுவிட்ட நிலையில் உங்களை இங்கேயே தடுத்து நிறுத்தியது எது?’ என்று கேட்கப்படும். 


அதற்கு அவர்கள், ‘நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்துவிட்டோம்; 


இன்றோ நாங்கள் அவர்களை விட இவன் (இறைவன்) பாலுள்ள தேவை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறோம். 


ஒவ்வொரு கூட்டத்தாரும் தாங்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றுடன் சேரட்டும் என்று ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பதைச் செவியுற்றோம். 


ஆகவே நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்’ என்று கூறுவார்கள்.”


(நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: 

“அப்போது ‘அல்-ஜப்பார்’ (அடக்கி ஆள்பவன் - இறைவன்) அவர்களிடம் வருவான். 


அவன், ‘நானே உங்கள் இறைவன்’ என்று கூறுவான். 


அதற்கு அவர்கள், ‘நீயே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள். 


நபிமார்களைத் தவிர வேறு யாரும் அவனிடம் பேசமாட்டார்கள். 


அவன், ‘அவனை நீங்கள் அறிந்துகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?’ என்று கேட்பான். 


அதற்கு அவர்கள், ‘கெண்டைக்கால் (அஸ்-ஸாக்)’ என்று சொல்வார்கள். 


உடனே அவன் தன் கெண்டைக்காலைத் திறப்பான். 


இறைநம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் அவனுக்குச் சிரம் பணிவார்கள் (ஸுஜூது செய்வார்கள்). 


பிறகு முகஸ்துதிக்காகவும், புகழுக்காகவும் அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்தவர் மட்டும் எஞ்சியிருப்பார். 


அவர் சிரம் பணிய முற்படுவார்; ஆனால், அவரின் முதுகு ஒரே பலகையைப் போன்று (விறைப்பாக) மாறிவிடும்.”



“பிறகு பாலம் கொண்டுவரப்பட்டு நரகத்தின் இரு கரைகளுக்கிடையே வைக்கப்படும்.

” நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்?” என்று கேட்டோம்.

அவர்கள், “வழுக்கக்கூடியது; சறுக்கக்கூடியது; அதில் கொக்கிகளும், வளைந்த முட்களும் இருக்கும். அவை நஜ்த் பகுதியில் விளையக்கூடிய ‘சஅதான்’ முட்செடியின் முட்களைப் போன்று அகன்றிருக்கும்; அதற்கு வளைந்த முள் இருக்கும்.”


“இறைநம்பிக்கையாளர் அதைக் கண் இமைப்பதைப் போன்றும்,

மின்னலைப் போன்றும்,

காற்றைப் போன்றும்,

பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (வேகமாக) கடந்து விடுவார்.

(அவர்களில்) சேதமின்றி தப்புபவரும் உண்டு;

காயங்களுடன் தப்புபவரும் உண்டு;

நரக நெருப்பில் தள்ளப்படுபவரும் உண்டு.

அவர்களின் கடைசி நபர் தரதரவென இழுத்துச் செல்லப்படுவார்.”


அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அப்போது மக்கள் தங்களால் தாங்க முடியாத, சுமக்க முடியாத அளவுக்குத் துயரத்தையும் வேதனையையும் அடைவார்கள்.

அப்போது மக்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் இருக்கும் நிலையைப் பார்க்கவில்லையா? உங்களுக்கு நேர்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? உங்கள் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்பவரை நீங்கள் தேடமாட்டீர்களா?' என்று பேசிக்கொள்வார்கள்.


சிலர் சிலரிடம், 'ஆதம் அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.


மஅபத் பின் ஹிலால் அல்-அனஸீ அவர்கள் அறிவித்தார்கள்:


"மறுமை நாளில் மக்கள் கடலலைகளைப் போல ஒருவர் மீது ஒருவர் மோதுவார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


"மறுமை நாளில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒன்று திரட்டுவான்.

அப்போது அவர்கள், '(நமது சிரமத்தைப் போக்க) நம் இறைவனிடம் நமக்காகப் பரிந்துரைக்கக் கோரி, (அதன் மூலம்) இந்த இடத்திலிருந்து அவன் நம்மை விடுவித்தால் (நன்றாக இருக்குமே!)' என்று கூறுவார்கள்.


அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அதற்கு ஆதம் (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்.

மரத்தை நெருங்க வேண்டாமென அவன் என்னைத் தடுத்தான்.

நானோ அவனுக்கு மாறு செய்தேன்.

எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்!

நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.


அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் வருவார்கள்.

'நூஹ் அவர்களே! பூமியில் உள்ளவர்களுக்கு (ஆதமுக்குப் பின்) அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள் முதலாவதாவீர். அல்லாஹ் உங்களை 'நன்றியுள்ள அடியார்' (அப்துன் ஷகூரா) என்று அழைத்துள்ளான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.

நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.


அதற்கு நூஹ் (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்.

 (உலகில் வாழ்ந்தபோது) என் சமுதாயத்திற்கு எதிராக நான் ஒரு பிரார்த்தனை (சாபம்) செய்துவிட்டேன்.

எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்!

நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.


அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். 'நீங்களே அல்லாஹ்வின் நபியும், பூமியில் உள்ளவர்களில் அவனது உற்ற நண்பரும் (கலீல்) ஆவீர். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.

 நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.


அதற்கு இப்ராஹீம் (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்' என்று கூறிவிட்டு,

தாம் (மார்க்கத்திற்காகச்) சொன்ன பொய்களைக் குறிப்பிடுவார்கள்.

பிறகு, 'எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்!

நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; மூஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.


அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் வருவார்கள். 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ் தனது தூதுத்துவங்களை வழங்கியும், (உங்களுடன்) பேசியதன் மூலமும் மக்கள் அனைவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.

நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.


அதற்கு மூஸா (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்.

 நான் ஒரு உயிரைக் கொன்றுவிட்டேன்; (அவரைக் கொல்லும்படி) எனக்குக் கட்டளையிடப்பட்டிருக்கவில்லை.

எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்!

நீங்கள் ஈஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.


அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் வருவார்கள். 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; தொட்டிலில் இருக்கும்போதே மக்களிடம் பேசியவர்; மர்யம் அவர்களிடம் அவன் போட்ட அவனது வார்த்தையும், அவனிடமிருந்து வந்த ஓர் உயிரும் (ரூஹ்) ஆவீர். எனவே உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.

நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.


அதற்கு ஈஸா (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்' என்று கூறுவார்கள்.

(ஆனால்) அவர் (தமது) பாவம் எதையும் குறிப்பிடமாட்டார்கள்.

'எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்;

முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.


அவர்கள் என்னிடம் வருவார்கள். 'முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; இறைத்தூதர்களில் இறுதி முத்திரை; அல்லாஹ் உங்களது முந்திய, பிந்திய பாவங்களை மன்னித்துவிட்டான்.

உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.

நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.


அப்போது நான் (இறைவனிடம்) செல்வேன். அர்ஷுக்கு (சிம்மாசனத்திற்கு) கீழே வந்து, என் இறைவனுக்குச் சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். 


மஅபத் பின் ஹிலால் அல்-அனஸீ அவர்கள் அறிவித்த ஹதீதில் கீழ் வரக்கூடிய செய்திபோல் இடம் பெற்றுள்ளது 


  நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்.


ஆகவே, அவர்கள் என்னிடம் வருவார்கள்.

அப்போது நான், 'நான் அதற்காக இருக்கிறேன்' என்று கூறுவேன். 

பின்னர் நான் என் இறைவனிடம் (பரிந்துரைக்க) அனுமதி கேட்பேன்;

எனக்கு அனுமதி வழங்கப்படும். 


பின்னர் இறைவன், இப்போது எனக்குத் தெரியாத புகழுரைகளை எனக்கு உணர்த்துவான்;

அந்தப் புகழுரைகளால் அவனைப் புகழ்ந்து, அவனுக்கு முன்னால் சிரம் பணிந்து ஸஜ்தா செய்வேன்


அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, 'ஆதமே! (துயரத்தில் இருக்கும்) மக்களை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் தன் கரம் கொண்டு உங்களைப் படைத்தான்; தன் வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எல்லாப் பொருட்களின் பெயர்களையும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தான்.

எனவே, எங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்;

அவன் எங்களை இந்த இடத்திலிருந்து விடுவிக்கட்டும்' என்று கூறுவார்கள். 


அதற்கு ஆதம் (அலை), 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழையை அவர்களிடம் நினைவுகூர்வார்கள்.

மேலும், '

நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் அவரே' என்று கூறுவார்கள்.


அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அவர், 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழையை நினைவுகூர்வார். 


மேலும், 'நீங்கள் 'கலீலுர் ரஹ்மான்' (அளவற்ற அருளாளனின் உற்ற தோழர்) ஆகிய இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்.


அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அவர், 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழைகளை அவர்களிடம் நினைவுகூர்வார். 


மேலும், 'நீங்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் ஓர் அடியார்; அவருக்கு அல்லாஹ் 'தவ்ராத்' வேதத்தை வழங்கினான்; அவருடன் நேரிடையாகப் பேசினான்' என்று கூறுவார்.


அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அவர், 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழையை அவர்களிடம் நினைவுகூர்வார். 


மேலும், 'நீங்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும், அவனது வார்த்தையும், அவனது ஆன்மாவும் ஆவார்' என்று கூறுவார்.


அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அவர், 'நான் அந்த நிலையில் இல்லை. 

ஆனால், நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்.

அவர் ஓர் அடியார்; அவருடைய முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்' என்று கூறுவார்.


ஆகவே, அவர்கள் என்னிடம் வருவார்கள். நான் (சென்று) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன்.

எனக்கு அனுமதி வழங்கப்படும்.

என் இறைவனை நான் காணும்போது அவனுக்குச் சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான்



அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


பிறகு அல்லாஹ், எனக்கு முன் வேறு யாருக்கும் அறிவித்திராத அவனது புகழுரைகளையும், அவனைப் போற்றும் அழகிய வார்த்தைகளையும் எனக்கு (வஹீயாக) அறிவித்து உணர்த்துவான். 


பிறகு, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள், தரப்படும்; பரிந்துரை செய்யுங்கள், ஏற்கப்படும்' என்று சொல்லப்படும்.


அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'என் இறைவா! என் சமுதாயமே! என் சமுதாயமே! (உம்மத்தீ! உம்மத்தீ!)' என்று சொல்வேன்.


அப்போது, 'முஹம்மதே! உங்கள் சமுதாயத்தில் விசாரணை இல்லாதவர்களைச் சொர்க்கத்தின் வாசல்களில் வலது வாசல் வழியாக நுழையச் செய்யுங்கள்!

மற்ற வாசல்களிலும் அவர்கள் மக்களோடு கூட்டாக நுழைவார்கள்' என்று சொல்லப்படும்.


என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தின் இரு கதவு நிலைகளுக்கு இடைப்பட்ட தூரமானது,

மக்காவுக்கும் ஹஜருக்கும், அல்லது மக்காவுக்கும் புஸ்ராவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றதாகும்."



மஅபத் பின் ஹிலால் அல்-அனஸீ அவர்கள் அறிவித்தார்கள்:


பின்னர் நான் என் இறைவனிடம் (பரிந்துரைக்க) அனுமதி கேட்பேன்; எனக்கு அனுமதி வழங்கப்படும். 

பின்னர் இறைவன், இப்போது எனக்குத் தெரியாத புகழுரைகளை எனக்கு உணர்த்துவான்; அந்தப் புகழுரைகளால் அவனைப் புகழ்ந்து, அவனுக்கு முன்னால் சிரம் பணிந்து ஸஜ்தா செய்வேன்.


அப்போது, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! நீர் கூறும்; உமது சொல் செவியேற்கப்படும். கேளும்; உமக்குத் தரப்படும். பரிந்துரை செய்யும்; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும்.


நான், 'என் இறைவா! என் உம்மத்தினரே! என் உம்மத்தினரே!' என்று கூறுவேன்.

பின்னர், 'சென்று, யாருடைய இதயங்களில் ஒரு வாற்கோதுமை மணியின் எடைக்குச் சமமான ஈமான் (நம்பிக்கை) உள்ளதோ அவர்களை எல்லாம் (நரகிலிருந்து) வெளியேற்றுவீராக' என்று கூறப்படும். 


நான் சென்று அவ்வாறே செய்துவிட்டு, (மீண்டும்) அதே புகழுரைகளால் அவனைப் புகழ்ந்து, அவனுக்கு முன்னால் சிரம் பணிந்து ஸஜ்தா செய்வேன்.


அப்போது, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! நீர் கூறும்; உமது சொல் செவியேற்கப்படும். கேளும்; உமக்குத் தரப்படும். பரிந்துரை செய்யும்; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். 


நான், 'என் இறைவா! என் உம்மத்தினரே! என் உம்மத்தினரே!' என்று கூறுவேன். அப்போது, 'சென்று, யாருடைய இதயங்களில் ஓர் அணுவளவு அல்லது கடுகு விதையின் எடைக்குச் சமமான ஈமான் உள்ளதோ அவர்களை எல்லாம் (நரகிலிருந்து) வெளியேற்றுவீராக' என்று கூறப்படும்.

நான் சென்று அவ்வாறே செய்துவிட்டு, (மீண்டும்) அதே புகழுரைகளால் அவனைப் புகழ்ந்து, அவனுக்கு முன்னால் சிரம் பணிந்து ஸஜ்தா செய்வேன்.


அப்போது, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! நீர் கூறும்; உமது சொல் செவியேற்கப்படும். கேளும்; உமக்குத் தரப்படும். பரிந்துரை செய்யும்; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். 


நான், 'என் இறைவா! என் உம்மத்தினரே! என் உம்மத்தினரே!' என்று கூறுவேன்.

அப்போது இறைவன், 'சென்று, யாருடைய இதயங்களில் மிக மிக மிகக் குறைந்த கடுகு விதை அளவு ஈமான் உள்ளதோ அவர்களை எல்லாம் நரகிலிருந்து வெளியேற்றுவீராக' என்று கூறுவான்.

நான் சென்று அவ்வாறே செய்வேன்."


(அறிவிப்பாளர் மஅபத் கூறுகிறார்:) நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து புறப்பட்டபோது,

 என் தோழர்களில் சிலரிடம், "அபூ கலீஃபாவின் வீட்டில் மறைந்திருக்கும் அல்-ஹஸன் (அல்-பஸ்ரி) அவர்களைச் சந்தித்து,

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்ததை அவரிடமும் விவரிப்போமா?" என்று கேட்டேன்.

எனவே நாங்கள் அவரிடம் சென்றோம்; அவருக்கு ஸலாம் கூறினோம்; அவர் எங்களை அனுமதித்தார்.


நாங்கள் அவரிடம், "அபூ ஸயீத்! நாங்கள் உங்கள் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளோம்.

அவர்கள் பரிந்துரை (ஷஃபாஅத்) குறித்த ஒரு ஹதீஸை எங்களுக்கு அறிவித்தார்கள்;

அது போன்ற ஒன்றை நான் இதற்கு முன் கேட்டதில்லை" என்று கூறினோம்.

அவர், "அது என்ன?" என்று கேட்டார். பின்னர் நாங்கள் அந்த ஹதீஸை அவரிடம் விவரித்து, "(ஹதீஸின்) இந்த இடத்தில் அவர் நிறுத்திவிட்டார்" என்று கூறினோம்.

 அவர், "பிறகு என்ன?" என்று கேட்டார்.

நாங்கள், "இதற்கு மேல் அவர் எங்களுக்கு அதிகப்படுத்திக் கூறவில்லை" என்று கூறினோம்.


அதற்கு அல்-ஹஸன், "அனஸ் (ரலி) அவர்கள்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நல்ல திடகாத்திரமாக இருந்தபோது இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்.

அவர் (மீதியை) மறந்துவிட்டாரா அல்லது நீங்கள் (செயல்புரியாமல்) அதையே சார்ந்து இருப்பதை அவர் விரும்பவில்லையா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.

 நாங்கள், "அபூ ஸயீத்! அதை எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கூறினோம்.

 அவர் சிரித்துவிட்டு, "மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்" என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்:


"நான் அதைக் குறிப்பிடவில்லை; ஆனால் அதை உங்களுக்கு அறிவிக்கவே விரும்பினேன்.

அனஸ் (ரலி) அவர்கள் உங்களுக்குக் கூறியது போலவே எனக்கும் கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் (கூடுதலாகக்) கூறினார்கள்:


'பின்னர் நான் நான்காவது முறையாகத் திரும்பி வந்து, அதே புகழுரைகளால் அவனைப் புகழ்ந்து, அவனுக்கு முன்னால் சிரம் பணிந்து ஸஜ்தா செய்வேன். 


அப்போது, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! நீர் கூறும்; உமது சொல் செவியேற்கப்படும். கேளும்; உமக்குத் தரப்படும். பரிந்துரை செய்யும்; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும்.


அப்போது நான், 'என் இறைவா! லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை) என்று கூறியவர்களுக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதி அளியுங்கள்' என்று கூறுவேன்.


அதற்கு இறைவன், 'என் வல்லமையின் மீதும், என் மாட்சிமையின் மீதும், என் பெருமையின் மீதும், என் மகத்துவத்தின் மீதும் ஆணையாக! லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர்களை நான் நரகிலிருந்து  நிச்சயமாக வெளியேற்றுவேன்' என்று கூறுவான்.'"

  


அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும். கேளும்; வழங்கப்படும். பரிந்துரைப்பீராக; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும்.


அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழுரைகளைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு பரிந்துரைப்பேன்.

அப்போது (யாரை நான் சொர்க்கத்தில் சேர்க்கலாம் என்பது குறித்து) எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன்.


பிறகு நான் திரும்புவேன். என் இறைவனை நான் காணும்போது சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன்.


அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். 


பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும். கேளும்; வழங்கப்படும். பரிந்துரைப்பீராக; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். 


அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழுரைகளைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு பரிந்துரைப்பேன்.

அப்போது எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன்.


பிறகு நான் திரும்புவேன். என் இறைவனை நான் காணும்போது சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். 


பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும். கேளும்; வழங்கப்படும். பரிந்துரைப்பீராக; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். 


அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழுரைகளைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு பரிந்துரைப்பேன். அப்போது எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன்.


பிறகு நான் திரும்பி வந்து, 'என் இறைவா! குர்ஆன் (நரகத்தில் இருக்குமாறு) தடுத்து நிறுத்தியவர்களையும், (நரகத்தில்) நிரந்தரமாக இருப்பது விதியாக்கப்பட்டவர்களையும் தவிர நரகத்தில் வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூறுவேன்."


நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்: "யார் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லி, அவர் உள்ளத்தில் ஒரு வாற்கோதுமை அளவு நன்மை இருந்ததோ அவர் நரகத்திலிருந்து வெளியேறுவார்.


பிறகு, யார் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லி, அவர் உள்ளத்தில் ஒரு கோதுமை அளவு நன்மை இருந்ததோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறுவார்.

பிறகு, யார் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லி, அவர் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருந்ததோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறுவார்."


அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:


“அல்லாஹ் கூறுவான்: ‘செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் ஒரு தீனார் அளவு இறைநம்பிக்கை இருப்பதை நீங்கள் காண்கிறீர்களோ அவரை வெளியேற்றுங்கள்.’ 


அல்லாஹ் அவர்களின் உருவங்களை (முகங்களை) எரிப்பதை நரகத்திற்குத் தடுத்துவிடுவான். 


அவர்கள் இவர்களிடம் வருவார்கள்.

இவர்களில் சிலர் பாதம் வரையிலும், சிலர் கெண்டைக்கால் வரையிலும் நெருப்பில் மூழ்கியிருப்பார்கள்.

 எனவே தாங்கள் அறிந்தவர்களை அவர்கள் வெளியேற்றுவார்கள். 


பிறகு (இறைவனிடம்) திரும்புவார்கள். அவன், ‘செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் அரைத் தீனார் அளவு இறைநம்பிக்கை இருப்பதை நீங்கள் காண்கிறீர்களோ அவரை வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். 


அவ்வாறே அவர்கள், தாங்கள் அறிந்தவர்களை வெளியேற்றிவிட்டுத் திரும்புவார்கள். 


பிறகு அவன், ‘செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் ஓர் அணு அளவு இறைநம்பிக்கை இருப்பதை நீங்கள் காண்கிறீர்களோ அவரை வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான்.

அவ்வாறே அவர்கள், தாங்கள் அறிந்தவர்களை வெளியேற்றுவார்கள்.”


அபூ ஸயீத் (ரலி) அவர்கள், “நீங்கள் என்னை நம்பாவிட்டால், ‘நிச்சயமாக அல்லாஹ் ஓர் அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான்; அது நன்மையாக இருந்தால் அதனை இரட்டிப்பாக்குவான்...’ (திருக்குர்ஆன் 4:40) என்ற இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.


“பிறகு நபிமார்கள், வானவர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் பரிந்துரை செய்வார்கள். 


அப்போது ‘ஜப்பார்’ (இறைவன்), ‘என் பரிந்துரை மட்டுமே எஞ்சியுள்ளது’ என்று கூறுவான். 


அவன் நரகத்திலிருந்து ஒரு பிடியை அள்ளி, எரிந்து கருகிப்போன கூட்டத்தாரை வெளியேற்றுவான். 

சொர்க்கத்தின் வாசலில் உள்ள ‘வாழ்வு நீர்’ (மாவுல் ஹயாத்) எனப்படும் ஆற்றில் அவர்கள் போடப்படுவார்கள். 

வெள்ளம் அடித்து வரும் வண்டலில் விதை முளைப்பதைப் போன்று அவர்கள் அதன் கரைகளில் முளைப்பார்கள்.

பாறை ஓாரத்திலோ அல்லது மரத்தின் ஓரத்திலோ அவ்விதை இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

அதில் வெயிலின் பக்கம் உள்ளது பச்சையாகவும், நிழலின் பக்கம் உள்ளது வெள்ளையாகவும் இருக்கும். அவர்கள் முத்துக்களைப் போன்று வெளியே வருவார்கள். 


அவர்களின் கழுத்துக்களில் முத்திரைகள் (காவாத்தீம்) இடப்படும். பிறகு சொர்க்கத்தில் நுழைவார்கள். சொர்க்கவாசிகள், ‘இவர்கள் அர்-ரஹ்மானால் (அளவற்ற அருளாளனால்) விடுதலை செய்யப்பட்டவர்கள்; 

இவர்கள் எவ்வித நற்செயலும் செய்யாமலும், எந்த நன்மையும் புரியாமலும் இறைவன் இவர்களைச் சொர்க்கத்தில் நுழையச் செய்தான்’ என்று கூறுவார்கள். 


அவர்களிடம், ‘நீங்கள் கண்டதும், அதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு’ என்று சொல்லப்படும்.”.

Comments