எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்ற வார்த்தையோடு துவங்குகிறேன்.
எங்களுக்கு வந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்களுக்கு வந்த கல்வி எப்போது விடைபெறும் என்று தெரியவில்லை.
எங்களோட கல்வி விடைபெறும் முன் உங்களுடன் பகிர்கிறேன்.
கருத்து வேறுபாடு இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் நாங்கள் அதை வரவேற்க்கிறோம்.
தஜ்ஜால் பாகம் 9
கடைசி ஒரே விஷயம் சொல்லி இந்த தஜ்ஜாலின் பகுதியை முடித்து கொள்ளலாம்.
ஒரிஜினலாக தஜ்ஜால் வரக்கூடிய சூழ்நிலையை நபி ஸல் அவர்கள் விளக்குகிறார்கள்.
இதை படியுங்கள்
முஸ்லீம் 5629. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசியபோது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும், (சில சமயம்) உயர்த்தவும் செய்தார்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்ச மரத்தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.
பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டு, "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். (அப்போது) அவனைப் பற்றி(க் குரலை)த் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன், (அருகிலுள்ள) பேரீச்ச மரத்தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள் (அதுதான் எங்கள் அச்சத்திற்குக் காரணம்)" என்று கூறினோம்.
அப்போது நபியவர்கள், "நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல; நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும்போது அவன் தோன்றினால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால், அப்போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக்கொள்ள வேண்டும்; அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான்.
தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான்; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான்.
உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக "அல்கஹ்ஃப்" அத்தியாயத்தின் (18) ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும். அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து, வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான்; அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள்" என்றார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்?" என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாட்கள்" என்று பதிலளித்த நபியவர்கள், "அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா?" என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "இல்லை (போதாது);அந்த (நீண்ட) நாளை, அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது)கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அவன் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்?" என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் மேகம் போன்று (அவன் வேகமாக பூமியைச் சுற்றிவருவான்)" என்றார்கள். மேலும், நபியவர்கள் கூறினார்கள்:
அவன் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்புவிடுப்பான். அவர்களும் அவன்மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள். உடனே வானத்திற்கு (மழை பொழியுமாறு) அவன் கட்டளையிட, மழை பொழியும். பூமிக்கு(த்தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு) கட்டளையிட, அது முளையவைக்கும். (அவற்றை மேய்ந்து) அவர்களின் கால்நடைகள் ஏற்கெனவே இருந்ததைவிட நீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியவையாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.
பின்னர், அவன் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து, (தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு) அவர்களுக்கும் அழைப்பு விடுப்பான். ஆனால், அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்றுவிடுவான். அதனால், அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப்பொழுதை அடைவார்கள். அவர்களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (எஞ்சி) இராது.
அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து, "உன்னிடம் இருக்கின்ற புதையல்களை வெளிப்படுத்து" என்று கூறுவான். அப்போது (வெளிப்படும்) அந்தப் புதையல்கள், இராணித் தேனீக்களை (பின்பற்றிச் செல்லும் தேனீக்களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.
பின்னர், அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து, அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி,அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளிவிட்டு (அவ்விரண்டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழுந்து வருவார்.
இதற்கிடையே, மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) "திமஷ்க்" (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.
அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும்; தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான். அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும்.
பின்னர் ஈசா (அலை) அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள். இறுதியில், (பாலஸ் தீனத்திலுள்ள) "லுத்து" எனும் நகரத்தின் தலைவாயிலருகே அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை(ப்பரிவோடு) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்.
இதற்கிடையே, ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், "நான் என் அடியார்கள் சிலரை வெளி வரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) "தூர்" மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்" என்று (வஹீ) அறிவிப்பான்.
பின்னர், அல்லாஹ் "யஃஜூஜ்" "மஃஜூஜ்" கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) "தபரிய்யா" ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. "முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்" என்று பேசிக்கொள்வார்கள்.
பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் ("தூர்" மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும்.
பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். பின்னர் இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள்.
அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள். உடனே இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக்கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும்.
பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடிவீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கிவிடும். பின்னர் பூமிக்கு, "நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக" என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.
இந்நிலையில், அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான். அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இந்த பதிவை குறித்து உங்களுக்கு புரிந்து விட்டது என்றால்.(ஆறு விஷயங்கள் (நிகழ்வதற்கு) முன்னர் நற்செயல்களில் விரைந்து ஈடுபடுங்கள்)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆறு விஷயங்கள் (நிகழ்வதற்கு) முன்னர் நற்செயல்களில் விரைந்து ஈடுபடுங்கள்: சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, அல்லது புகைமூட்டம், அல்லது தஜ்ஜால், அல்லது (பூமியில் வெளிப்படும்) மிருகம், அல்லது உங்களில் ஒருவருக்குரிய (தனிப்பட்ட) முடிவு (மரணம்), அல்லது பொதுவான விவகாரம் (மறுமை)."
ஸஹீஹ் முஸ்லிம் : 2947 அ
நபி என்று ஒருவர் வந்து விட்டால் ரத்தம் ஓட்டப்படாமல் சிறைபிடிக்க இயலாது என்ற அல்லாஹ்வின் வார்த்தைக்கு ஓத்தாக நபி ஈஸா அலை அவர்கள் வந்தால் முடிவுகளை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.
ஆதாரம் நபி ஸல் அவர்கள் பத்ர் களத்தில் எடுத்த முடிவை அல்லாஹ் மாற்றுகிறான்.
அந்த இடத்தில் அல்லாஹ் கூறின வார்த்தை கீழே.......
நபி என்று ஒருவர் வந்துவிட்டால் ரத்தம் ஒட்டாமல் சிறைபிடிப்பது நபிக்கு அழகல்ல
பத்ர் போர் கைதிகளை விடுவிப்பது குறித்து உள்ள ஹதீத்
உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போர் நாளன்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களைப் பார்த்தார்கள். அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்; நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் முன்னூற்று பத்தொன்பது பேராக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கித் திரும்பி, தங்கள் கரங்களை நீட்டி, தங்கள் இறைவனிடம் இவ்வாறு சப்தமிட்டுப் பிரார்த்திக்கத் தொடங்கினார்கள்:
*"அல்லாஹும்ம அன்ஜிஸ் லீ மா வஅத்தனீ, அல்லாஹும்ம ஆதி மா வஅத்தனீ, அல்லாஹும்ம இன் தஹ்லிக் ஹாதிஹில் இஸாபத மின் அஹ்லில் இஸ்லாம் லா துஅபத் ஃபில் அர்த்."*
(பொருள்: "யா அல்லாஹ்! நீ எனக்கு வாக்களித்ததை எனக்கு நிறைவேற்றித் தருவாயாக! யா அல்லாஹ்! நீ எனக்கு வாக்களித்ததை எனக்கு வழங்குவாயாக! யா அல்லாஹ்! இஸ்லாமியர்களான இச்சிறிய கூட்டம் அழிக்கப்பட்டால், இந்தப் பூமியில் (உன்னை வணங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்;) நீ வணங்கப்பட மாட்டாய்.")
அவர்கள் தங்கள் கரங்களை நீட்டியவாறு, கிப்லாவை நோக்கித் தங்கள் இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள்; எந்த அளவிற்கென்றால், அவர்களின் மேலாடை அவர்களின் தோள்களிலிருந்து நழுவி விழுந்தது.
அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் அங்கே வந்து, அவர்களின் மேலாடையை எடுத்து அவர்களின் தோள்களில் போட்டார்கள். பின்னர் அவர்கள் பின்னாலிருந்து நபியைத் தழுவிக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்றாடியது போதும்; நிச்சயமாக அவன் உங்களுக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவான்" என்று கூறினார்கள்.
அப்போது கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்:
*"இத் தஸ்தகீதூன ரப்பகும் ஃபஸ்தஜாப லகும் அன்னீ முமிட்டுகும் பிஅல்ஃபின் மினல் மலாயிகதி முர்திஃபீன்"*
(பொருள்: "(நினைவு கூருங்கள்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது, 'தொடர்ச்சியாக வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.") (அல்குர்ஆன் 8:9).
ஆகவே, அல்லாஹ் வானவர்களைக் கொண்டு அவருக்கு உதவினான்.
அபூ ஸுமைல் அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்கள் கூறினார்கள்:
அன்றைய தினம் ஒரு முஸ்லிம் தனக்கு முன்னால் (ஓடிக்கொண்டிருந்த) ஒரு இணைவைப்பாளரைத் துரத்திக்கொண்டிருந்தபோது, தனக்கு மேலே சாட்டையால் விளாசும் சப்தத்தையும், குதிரை வீரர் ஒருவரின் குரலையும் கேட்டார். அவர், "ஹைஸூம்! முன்னே செல்!" என்று கூறினார். (துரத்திச் சென்ற) அந்த முஸ்லிம் தனக்கு முன்னால் இருந்த இணைவைப்பாளரைப் பார்த்தார். அவன் மல்லாந்து விழுந்துகிடந்தான். அவன் மூக்கு அறுபட்டு, முகம் சாட்டையால் அடிக்கப்பட்டது போல் கிழிக்கப்பட்டு, அவ்விடமெல்லாம் கறுத்து (பச்சை நிறமாக) மாறியிருந்ததை அவர் பார்த்தார்.
அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் உண்மை கூறினீர். அது மூன்றாவது வானத்திலிருந்து வந்த உதவியாகும்" என்று கூறினார்கள்.
அன்றைய தினம் (முஸ்லிம்கள் எதிரிகளில்) எழுபது பேரைக் கொன்றார்கள்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தார்கள்.
(சிறைப்பிடிக்கப்பட்டவர்களைக் கொண்டு வந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களிடமும் உமர் (ரழி) அவர்களிடமும், "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அபூபக்கர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் (நமது) தந்தையரின் வழியில் வந்த உறவினர்களும், சுற்றத்தாருமாவர். இவர்களிடமிருந்து ஈட்டுத்தொகையை (ஃபித்யா) பெற்றுக்கொண்டு (விடுதலை செய்ய வேண்டும் என்று) நான் கருதுகிறேன். அது நிராகரிப்பவர்களுக்கு எதிராக நமக்கு ஒரு பலமாக அமையும். அல்லாஹ் அவர்களை இஸ்லாத்தின் பால் வழிநடத்தவும் கூடும்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் மகனே! உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான் (உமர்), "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! அபூபக்கர் அவர்கள் கருதியதை நான் கருதவில்லை. (மாறாக,) இவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்; நாங்கள் இவர்களின் கழுத்துகளை வெட்ட வேண்டும் (என்றே நான் கருதுகிறேன்). அகீலை அலீயிடம் ஒப்படையுங்கள்; அவர் இவன் கழுத்தை வெட்டட்டும். இன்னாரை -உமரின் உறவினர் ஒருவரைச் சுட்டிக்காட்டி- என்னிடம் ஒப்படையுங்கள்; நான் இவன் கழுத்தை வெட்டுகிறேன். ஏனெனில், இவர்கள் நிராகரிப்பின் தலைவர்களும், அதன் மூவர்களுமாவர்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரழி) கூறியதை விரும்பினார்கள்; நான் கூறியதை விரும்பவில்லை.
மறுநாள் நான் (அவர்களிடம்) வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரழி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் தோழரும் எதற்காக அழுகிறீர்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள். அழுகை வந்தால் நானும் அழுகிறேன்; அழுகை வராவிட்டால் உங்கள் இருவரின் அழுகைக்காக நானும் அழுவது போல பாவனை செய்கிறேன்" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கைதிகளிடமிருந்து) ஈட்டுத்தொகை பெறலாம் என உங்கள் தோழர்கள் என்னிடம் கூறியதற்காவே நான் அழுகிறேன். இந்த மரத்தைவிட மிக அருகில் அவர்களுக்கு வரவிருந்த வேதனை எனக்குக் காட்டப்பட்டது" என்று கூறினார்கள். (தமக்கு அருகிலிருந்த ஒரு மரத்தை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.)
அப்போது கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) இறக்கி அருளினான்:
*"மா கான லினபிய்யின் அன் யகூன லஹு அஸ்ரா ஹத்தா யுத்ஹின ஃபில் அர்த்..."*
(பொருள்: "பூமியில் (எதிரிகளின் இரத்தத்தை ஓட்டி) பலவீனம் அடையச் செய்யும் வரை, சிறைக்கைதிகள் ஒரு நபிக்கு இருப்பது தகாது...")
(மேலும்) *"ஃபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிபா"*
(பொருள்: "ஆகவே, நீங்கள் (போரில்) கைப்பற்றிய பொருட்களிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானவைகளையே உண்ணுங்கள்.") (அல்குர்ஆன் 8:67-69).
ஆகவே, போரில் கிடைத்த பொருட்களை (கனீமத்) அல்லாஹ் அவர்களுக்கு அனுமதித்தான்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1763
நம்மளுடைய முஸ்லீம் சமூகம்
லா இலாஹா இல்லல் லாஹு
என்று சொன்ன "ஷியா" வை முழு எதிரியாக பாக்கிறது.
அல்லாஹ் குர் ஆனில் யார் மீது கோபம் கொண்டானோ அவர்களை இந்த உம்மத் "நண்பர்களாக" எடுத்து கொண்டது.
யாரையும் இங்கு சாதாரணமாக எடை போடாதீர்கள்.
(முஸ்லீம் 5597) தஜ்ஜாலுடன் கடைசி நேரத்தில் போராடக்கூடிய நபர்களில் "இஸ்ஷாக்" நபியின் சந்ததிகளில் "70000" பேர் இருப்பார்கள் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளவும்.
(முஸ்லீம் 5629) இல் வரக்கூடிய தஜ்ஜாலை பற்றி 2 விஷயம் மட்டுமே இங்கே 8 பாகங்களாக விளக்கியுள்ளோம்.
இதை தாண்டி விளக்கம் கொடுப்போமேயானால் இதன் பகுதி 100 கூட வரலாம்
நாங்கள் மக்கள் சிந்திக்க மட்டுமே இதை கூறியிருக்கிறோம்.
தஜ்ஜாலை பற்றி இந்த முழு பதிவும் படித்து விட்டும் புரியவில்லை என்றால்
நபி ஸல் அவர்களின் கூற்றுப்படி சூரா கஹ்ஃப் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஓதி வந்தால் மட்டுமே தஜ்ஜாலின் அரசியல் புரியும்.
ஆகவே சூரா கஹ்ஃப் ஒரே ஒரு முறை ஓதி முடித்து புரிய வில்லை என்று இருக்காதீர்கள்.
தொடர்ந்து ஓதி வாருங்கள்
இந்த தொடர்ந்து என்பதுக்கு அர்த்தம்
1 வருடமும் ஆகலாம்
2 வருடமும் ஆகலாம்
3 ம் ஆகலாம்
10 வருடமும் ஆகலாம்
நாம் வருடங்களை கணக்கு வைக்க வேண்டாம்.
தொடர்ந்து சூரா கஹ்ஃப் ஓதி வருவோம்
வரக்கூடிய காலம் எப்படியாக இருந்தாலும்.
அதை இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் முஹ்மீன்களுக்கு புரிய வைப்பான்
Comments
Post a Comment