தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்தல்
இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு விஷயம் உண்டு.
மார்க்கத்தில் துருவித் துருவி கேள்விகள் கேட்பது இறைநம்பிக்கையாளருக்கு அழகல்ல.
அதற்கு உதாரணமாக, ஓர் ஆதாரத்தை இங்கே வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆதாரம்:
திருக்குர்ஆன் விளக்கவுரை
பாகம்: 1
நூல்: இப்னு கஸீர்
பக்கம்: 299 முதல் 300 வரை
இதில் தேவையற்ற கேள்விகளைப் பற்றி சில குறிப்புகள் உள்ளன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களுக்கு எதைப் பற்றி 'அதைச் செய்யுங்கள்' அல்லது 'இதைச் செய்ய வேண்டாம்' என்று சொல்லாமல் விட்டுவிட்டேனோ,
அதைப் பற்றிக் கேள்விகள் கேட்காமல் நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதெல்லாம், அவர்கள் தங்கள் நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும்,
அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதினாலும் தான். எனவே,
உங்களுக்கு ஒன்றை நான் கட்டளையிட்டால், உங்களால் முடிந்த அளவிற்கு அதைச் செய்யுங்கள்;
ஒன்றிலிருந்து உங்களைத் தடுத்தால், அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.
1. ஹதீஸ் எண்: 7288 (ஸஹீஹ் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் எதைச் செய்யுங்கள் என்றோ அல்லது செய்ய வேண்டாம் என்றோ உங்களிடம் கூறாமல் விட்டுவிட்டேனோ, அதைப் பற்றிக் கேள்விகள் கேட்காமல் நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதினாலும் தான். எனவே, உங்களுக்கு ஒன்றை நான் தடை செய்தால் அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஒன்றைச் செய்யுமாறு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்."
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
2. ஹதீஸ் எண்: 7289 (ஸஹீஹ் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தினாலேயே அது (மக்களுக்கு) தடை செய்யப்பட்டு விடுமானால், அவர்தான் முஸ்லிம்களிலேயே பெரும் குற்றம் புரிந்தவர் ஆவார்."
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி).
இதற்கு முன் ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான்" என்று மக்களிடம் கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டிலுமா?" என்று கேட்டார்.
அவர் இவ்வாறு திரும்பத் திரும்ப மூன்று முறைகள் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். சற்று நேரத்திற்குப் பிறகு "இல்லை" என்று கூறிவிட்டு,
பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
"நான் மட்டும் 'ஆம்' என்று கூறியிருந்தால், அது ஆண்டுதோறும் கடமையாக்கப்பட்டிருக்கும். அப்படி கடமையாக்கப்பட்டிருந்தால், உங்களால் அதை நிறைவேற்ற இயலாமல் போயிருக்கும்."
நபித்தோழர்களின் கூற்று
அனஸ் பின் மாலிக் (ரலி): "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதைப் பற்றியும் கேள்வி கேட்கக் கூடாது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால், விவரம் தெரியாத கிராமவாசிகள் எவரேனும் வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேள்வி கேட்பார்களா, அதை நாம் செவியுறலாமே என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.
இப்னு அப்பாஸ் (ரலி): கூறுகிறார்கள்.
"முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களை விடச் சிறந்த சமுதாயத்தை நான் கண்டதில்லை. அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வெறும் 12 பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த 12 கேள்விகளும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
குர்ஆனில் இடம்பெற்றுள்ள சில கேள்விகள்
நபித்தோழர்கள் கேட்ட முக்கியமான கேள்விகளும்,
அதற்கான பதில்களாக இறங்கிய வசனங்களும்:
மது மற்றும் சூதாட்டம்: "உம்மிடம் அவர்கள் மதுவைப் பற்றியும், சூதாட்டத்தைப் பற்றியும் கேட்கின்றனர்..." (திருக்குர்ஆன் 2:219).
புனித மாதங்களில் போர்: "புனித மாதங்களில் போர் புரிவது குறித்து உம்மிடம் வினவுகின்றனர்..." (திருக்குர்ஆன் 2:217).
அனாதைகள் குறித்து: "அவர்கள் உம்மிடம் அனாதைகளைப் பற்றியும் கேட்கின்றனர்..." (திருக்குர்ஆன் 2:220).
2-வது அத்தியாயம்: 189-வது வசனம்
2-வது அத்தியாயம்: 215-வது வசனம்
2-வது அத்தியாயம்: 222-வது வசனம்
5-வது அத்தியாயம்: 4-வது வசனம்
7-வது அத்தியாயம்: 187-வது வசனம்
8-வது அத்தியாயம்: 1-வது வசனம்
17-வது அத்தியாயம்: 85-வது வசனம்
18-வது அத்தியாயம்: 83-வது வசனம்
20-வது அத்தியாயம்: 105-வது வசனம்
முன்னர் மூசாவிடம் கேட்கப்பட்டதைப் போன்று உங்கள் தூதரிடமும் நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா?" என்ற வினா, இறைநம்பிக்கையாளர்கள் மற்றும் இறைமறுப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவானதாகும்.
ஒருமுறை ராஃபியூ பின் ஹுரைமலா மற்றும் வஹப் பின் ஸைத் ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,
"முஹம்மதே! நீர் விண்ணிலிருந்து ஒரு வேதத்தை எங்கள் மீது இறக்கிக் கொண்டு வாரும்; அப்படி கொண்டு வந்தால் அதை நாங்கள் ஓதுவோம்.
மேலும், எங்களுக்காக ஆறுகளைப் பொங்கி வரச் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் உம்மை நாங்கள் ஏற்றுப் பின்பற்றுவோம்" என்று கூறினர்.
அவர்கள் இவ்வாறு வரம்பு மீறி கேள்வி கேட்டதன் பின்னணியிலேயே,
அல்லாஹ் திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தை அருளினான்:
"முன்னர் மூஸாவிடம் கேட்கப்பட்டதைப் போன்று உங்கள் தூதரிடமும் நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா? எவர் ஈமானுக்குப் பகரமாக குஃப்ரை (இறைநிராகரிப்பை) மாற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியைத் தவறவிட்டு விட்டார்." (திருக்குர்ஆன் 2:108)
Comments
Post a Comment