அல்பகரா, 2:34 ஆதமுக்கு சிரம் பணியுதல்

 அல்பகரா, 2:34 | 133 | தஃப்சீர் இப்னு கஸீர் - 1

​வஃபல்னா லில்மலாயிகதிஸ்ஜுது லிஆதம ஃபஸஜதூ இல்லா இப்லீஸ; அபா வஸ்தக்பர வகான மினல் காஃபிரீன் (34)

​34. 'நீங்கள் ஆதமுக்குச் சிரம்பணியுங்கள்' என்று நாம் வானவர்களிடம் கூறியபோது, (அங்கிருந்த) இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம்பணிந்தனர். அவனோ கர்வங்கொண்டு மறுத்துவிட்டான். இறைமறுப்பாளர்களில் ஒருவனாகவும் அவன் ஆகிவிட்டான்.

​(ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்களுக்குச் சிரம்பணியுமாறு வானவர்களுக்குத் தான் உத்தரவிட்ட செய்தியை இங்கு அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

​இது ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த மகத்தான மரியாதையாகும். அவருக்குத் தான் வழங்கிய இந்தப் பேருதவியை அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு இறைவன் எடுத்துரைக்கின்றான்.

​இதற்கு ஏராளமான நபிமொழிகளும் சான்றுகளாக உள்ளன. முந்தைய வசனத்தின் விரிவுரையில் இடம்பெற்ற பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான நபிமொழியும் அவற்றில் ஒன்றாகும். மேலும், மூஸா (அலை) அவர்கள் தொடர்பாகப் பின்னால் வரும் நபிமொழியும் அவற்றில் அடங்கும்.

​அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒரு முறை) நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம், "என் இறைவா! சொர்க்கத்திலிருந்து எங்களையும் தம்மையும் வெளியேற்றிவிட்ட அந்த ஆதமை எனக்குக் காட்டுவாயாக!" என்று கேட்டார்கள். அதையடுத்து ஆதமும் மூஸாவும் சந்தித்துக் கொண்டனர்.

​அப்போது, "அல்லாஹ் யாரைத் தன் கையால் படைத்து, தன்னுயிரை அவருள் ஊதியதோடல்லாமல், அவருக்குத் தன் வானவர்களைச் சிரம்பணியவைத்தானோ அந்த ஆதம் நீங்கள்தானே!" என்று அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் கேட்டார்கள்.⁶⁹


69. முழு ஹதீஸ்  (நூல்: அபூதாவுத்)  வருகிறது


​இப்லீஸ்

​ஆதம் (அலை) அவர்களுக்குச் சிரம்பணியுமாறு வானவர்களுக்கு இறைவன் பிறப்பித்த இந்த ஆணை, (ஜின் இனத்தைச் சேர்ந்த) இப்லீஸிற்கும் பொருந்தும் என்றே தெரிகிறது. ஏனெனில், அவன் உண்மையில் வானவர்களின் இனத்தைச் சார்ந்தவன் அல்ல என்றாலும், சில வேளைகளில் அவன் வானவர்களை ஒத்திருந்தான்; அவர்களின் செயல்களால் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான். இதனால்தான், இந்த உத்தரவில் அவனும் அடங்கினான்; உத்தரவுக்கு மாறு புரிந்ததால் இகழப்பட்டான்.

​இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்லீஸ் (இறையாணைக்கு) மாறு செய்வதற்கு முன்னர் வானவர்களுடன் சேர்ந்து அவர்களில் ஒருவனாகவே இருந்துவந்தான். அப்போது அவன் பெயர் 'அஸாஸீல்' ஆகும். அவன் பூமியில் வசித்து வந்தான்.



வணக்க வழிபாட்டில் வானவர்களை மிஞ்சியவனாகவும், கல்வியறிவில் அவர்களைவிட மிகைத்தவனாகவும் இருந்தான். இதுவே அவனை ஆணவம் கொள்ளத் தூண்டியது. 'ஜின்' என்று அழைக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தான்.

ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகையில், "இப்லீஸ், முதல் வானத்தில் உள்ள வானவர்களின் தலைவனாக இருந்தான்" என்று குறிப்பிட்டார்கள். (இது தொடர்பாகப் பின்வரும் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களது கூற்றே சரியானதாகும்.)


​ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்லீஸ் வானவர்களில் ஒருவனாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக, மனித இனத்திற்கு ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு மூலமோ அதைப் போன்றே, இப்லீஸ் ஜின் இனத்தின் மூலம் ஆவான்.

​இது, சரியான அறிவிப்பாளர் தொடர் வழியாக ஹசன் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாகும்.

​ஷஹ்ர் பின் ஹவ்ப் (ரஹ்) அவர்கள், "இப்லீஸ் என்பவன், வானத்திலிருந்து வானவர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஜின் இனத்தாரில் ஒருவன் ஆவான். அவனை வானவர்களில் ஒருவர் சிறைபிடித்து வானத்திற்குக்கொண்டு சென்றார்" என்று கூறியுள்ளார்கள். இதை இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

​ஸஅத் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள், "வானவர்கள் ஜின்களுடன் (ஒரு முறை) சண்டையிட்டனர். அப்போது சிறுவனாக இருந்த இப்லீஸ் வானவர்களால் சிறைபிடிக்கப்பட்டான். அது முதல் அவன் வானவர்களுடனேயே இருந்து, அவர்களுடன் சேர்ந்து இறைவனை வணங்கி வழிபட்டுவந்தான்.

​இந்நிலையில், ஆதம் (அலை) அவர்களுக்குச் சிரம்பணிய வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டபோது, வானவர்கள் அனைவரும் சிரம்பணிந்தனர். ஆனால், இப்லீஸ் மறுத்துவிட்டான். இதனாலேயே அல்லாஹ், "இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும் சிரம்பணிந்தனர்.) அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்" (18:50) என்று மற்றொரு வசனத்தில் கூறியுள்ளான்.

​"அவன் இறைமறுப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான்" என்பது குறித்து அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறுகையில், "அவன் (இறைவனுக்கு) மாறு புரிந்தவர்களில் ஒருவனாகிவிட்டான்" என்று விளக்கமளித்துள்ளார்கள்.

வானவர்கள் யாருக்குச் சிரம்பணிந்தனர்?

​"நீங்கள் ஆதமுக்குச் சிரம்பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறினோம்" என்ற தொடர் குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சிரம்பணிதல் என்பது ஆதம் (அலை) அவர்களுக்காக இருந்தாலும், (அதிலுள்ள) வழிபாடு அல்லாஹ்வுக்கே உரித்தானது. ஆதம் (அலை) அவர்களுக்கு மரியாதை வழங்கும் வகையில் தன் வானவர்களை அவருக்குச் சிரம்பணியச் செய்தான் இறைவன்.

​"இது, காணிக்கை செலுத்தல், முகமன் தெரிவித்தல், மரியாதை செலுத்தல் ஆகிய வகைகளைச் சேர்ந்த சிரம்பணிதல் ஆகும்" என்று சிலர் கூறியுள்ளனர். அல்லாஹ்...மற்றொரு வசனத்தில் (நபி யூசுஃப் (அலை) தொடர்பாகக்) குறிப்பிடுகின்றான்: ​அவர் தம் பெற்றோரை அரியணையின் மீது அமரவைத்தார். அவர்கள் (அனைவரும்) அவருக்கு (முன்) சிரம்பணிந்தவர்களாக வீழ்ந்தனர். (12:100) ​

இவ்வகைச் சிரம்பணிதல் முந்தைய சமுதாயத்தாருக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நமது மார்க்கத்தில் இது முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது. ​

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மக்கள் தங்களின் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் சிரம் பணிவதைக் கண்டேன். 

(மதீனா திரும்பிவந்து,) "அல்லாஹ்வின் தூதரே! சிரம்பணிந்து மரியாதை செலுத்தப்படுவதற்கு நீங்கள்தான் மிகவும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள்" என்று நான் கூறினேன். ​அதற்கு, "இல்லை; ஒரு மனிதன் சக மனிதனுக்குச் சிரம்பணிய வேண்டும் என நான் உத்தரவிடுவதாக இருந்தால், கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, ஒரு பெண் தன் கணவனுக்குச் சிரம்பணிய வேண்டும் என உத்தரவிட்டிருப்பேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.^{70} ​


வேறுசிலர், "வானவர்கள் சிரம்பணிந்தது அல்லாஹ்வுக்குத்தான். ஆனால், ஆதம் (அலை) அவர்கள் அதற்கு கிப்லா (முன்னோக்குத்) திசையாக இருந்தார்கள்" என்று கூறியுள்ளனர். ​இவற்றில் மிகத் தெளிவான கருத்து, முதலாவது கருத்தே ஆகும். அதுவே ஏற்றமானதும்கூட. 

அதாவது சிரம்பணிதல் ஆதம் (அலை) அவர்களுக்குத்தான். அது மரியாதை செய்தல், கண்ணியப்படுத்துதல் மற்றும் முகமன் தெரிவித்தல் என்ற வகையில் செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்ததும்பூட அல்லாஹ்வுக்கு வழிபட்டதாகவே அமையும். ​

ஏனெனில், இது அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டுச் செய்ததாகும். இக்கருத்தையே ராஸீ (ரஹ்) அவர்கள் தமது விரிவுரையில் வலுப்படுத்தி, மற்ற இரு கருத்துக்களும் பலமற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். 

​பலவீனமான அவ்விரு கருத்துக்களாவன: ​ஆதம் (அலை) அவர்களை கிப்லா (முன்னோக்குத்) திசையாக ஆக்கி அல்லாஹ்வுக்குச் சிரம்பணிதல். இதில் ஆதமுக்குச் சிறப்பு ஏதும் வெளிப்படாது. ​

சிரம்பணிவது என்பதன் கருத்து வெறுமனே பணிவைக் காட்டுவதுதான். குனிந்து நெற்றியை நிலத்தில் வைத்தல் அல்ல. இவ்விரண்டும் அவரது கூற்றுப்படி பலவீனமானவை ஆகும். ​

இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம்பணிந்தனர்; அவன் கர்வங்கொண்டு மறுத்துவிட்டான் - இது குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு வழங்கிய மரியாதையைக் கண்டு, அவர்மீது அல்லாஹ்வின் எதிரியான இப்லீஸ் பொறாமை கொண்டான். மேலும் அவன், "நானோ..நெருப்பு இனத்தைச் சேர்ந்தவன்; அவர் மண் இனத்தைச் சேர்ந்தவர். (நான் எப்படி அவருக்குச் சிரம்பணிவது?)" என்று கூறினான். ஆணவம்தான் குற்றங்களின் தொடக்கமாகும். ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் விரோதி இப்லீஸ் சிரம்பணியாமல் பெருமை கொண்டுவிட்டான். ​

"யாருடைய உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.^{71} ​

71. அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி); நூல்: ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 148. 

இப்லீஸின் உள்ளத்தில் ஆணவம், இறை மறுப்பு, பிடிவாதம் ஆகியவை குடிகொண்டிருந்தன. இந்தக் குணங்கள் புனிதமும் அருளும் மிகுந்த இறைச் சன்னிதானத்திலிருந்து வெகுதொலைவிற்கு விரட்டப்பட வேண்டியவை ஆகும். ​"அவன் இறைமறுப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான்" என்ற தொடருக்கு, "சிரம்பணிய மறுத்ததால் அவன் இறைமறுப்பாளர்களில் ஒருவனாக மாறிவிட்டான்" என்று மொழியியல் அறிஞர்களில் சிலர் பொருள் கூறியுள்ளனர். 

அல்லாஹ் வேறுசில வசனங்களில் கூறியிருப்பதை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்: ​ஆகவே, அவன் (நூஹின் மகன்) மூழ்கடிக்கப்பட்டவர்களுள் ஒருவனாக மாறிவிட்டான். (11:43) ​அப்போது நீங்களிருவரும் (ஆதம், ஹவ்வா) அநீதி இழைத்தவர்களாக மாறிவிடுவீர்கள். (2:35) ​

கவிஞர் கூறுகிறார்:^{72} ​

72. இந்தக் கவிஞரின் பெயர்: இப்னு அஹ்மத். (தஃப்சீர் குர்துபி) 

திக்குத் தெரியாத காட்டினிலே 

அந்த ஒட்டகங்கள், 

கட்டாந்தரையில் முட்டையிட்ட 

காடைகளைப் போன்றுள்ளன;

 அந்த முட்டைகளும் 

குஞ்சுகளாக மாறிவிட்டிருந்தன.^{73} ​


இப்னு ஃபூரக் (ரஹ்) அவர்கள் இது தொடர்பாகக் கூறுகையில், "இறைவனின் ஞானத்தில் இப்லீஸ் இறைமறுப்பாளர்களில் ஒருவனாக (முதலிலேயே) இருந்தான் என்பதே இவ்வசனத்தின் உட்பொருளாகும்" ​



73. காடை, அடையாளம் காண்பதில் பெயர்போன பறவை ஆகும். இதனாலேயே, 'காடையைவிட நன்கு வழி தெரிந்தவர்' என்று ஒருவரைப் பற்றிக் கூறும்போது அரபுகள் சொல்வதுண்டு. அந்தக் காடைகள் தாம் இட்ட முட்டைகளை நன்கு அடையாளம் கண்டுகொள்ளும். ஆனால், ஒரே இடத்திலுள்ள நிறைய முட்டைகள் குஞ்சுகளாக மாறிவிட்டால், அவற்றில் எது தனது குஞ்சு என்பதை அறிவதில் அந்தக் காடைகூடத் தடுமாறும். அவ்வாறுதான், திக்குத் தெரியாத காட்டில் அந்த ஒட்டகங்கள் வழி தெரியாமல் தடுமாறுகின்றன என்கிறார் கவிஞர். ​

இந்தக் கவிதையிலும், முன்கூறப்பட்ட இரு வசனங்களிலும் (11:43; 2:35) இடம்பெற்றுள்ள 'கான' எனும் வினைச்சொல்லுக்கு 'மாறிவிட்டது' எனப் பொருளாகும் என்று சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும். இதன்படி, இப்லீஸ் இறைமறுப்பாளர்களில் ஒருவனாக ஆகிவிட்டான் என்பதற்கு, மாறிவிட்டான் என்று பொருளாகும் என்று சிலர் விவரிக்கிறார்கள். அதாவது முன்பு நல்லவனாக இருந்த இப்லீஸ், இறைஆணைக்கேற்ப ஆதமுக்குச் சிரம்பணிய மறுத்ததால், இறைமறுப்பாளனாக மாறிவிட்டான்


என்று கூறியுள்ளார்கள். இந்தக் கருத்திற்கு குர்துபீ (ரஹ்) அவர்கள் முதலிடம் அளித்துள்ளார்கள்.

​இங்கு ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. அதாவது நபியாக இல்லாத ஒருவரின் கைகளின் மூலம் வழக்கத்திற்கு மாற்றமான அற்புதச் செயல்களை இறைவன் வெளிப்படுத்தினால் அது அவரது இறைநேசத்திற்கு அத்தாட்சியாக ஆகாது. (அவ்வாறுதான் வானவர்களுடன் இப்லீஸ் இருந்ததும்.) இது தொடர்பாக ராஃபிள்கள் மற்றும் சூஃபிகளில் சிலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

​இறைநேசர் அல்லாத ஒருவரின் கைகளின் மூலம் கூட அற்புதம் வெளிப்பட முடியும்; ஏன், கெட்டவன் மற்றும் இறைமறுப்பாளன் ஆகியோரின் கைகளில் இருந்தும்கூட அது வெளிப்படலாம் என்பதற்கு, இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவன்) தொடர்பாக வந்துள்ள நபிமொழி ஒரு சான்றாகும்.

​"வானம் ஒரு பெரும் புகையைக் கொண்டு வரும் ஒரு நாளை (நபியே!) நீங்கள் எதிர்பாருங்கள்" (44:10) எனும் வசனத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனத்தில் நினைத்துக் கொண்டபோது, "அது 'துக்' என்பதாகும்" என்று அவன் கூறினான்.⁷⁴


74. ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் எனும் யூதச் சிறுவனைச் சந்திக்கச் சென்றார்கள். அவன் தன்னை நபி என்று வாதிட்டுவந்தான். குர்ஆனில் 'அத்துகான்' எனும் 44ஆம் அத்தியாயத்தை நபியவர்கள் மனத்தில் நினைத்துக்கொண்டு, "நான் மனத்தில் மறைத்துவைத்திருப்பது என்ன என்று சொல் பார்க்கலாம்" என்றார்கள். அவன் உடனே 'துக்' (துகான்) என்றான். அப்போது நபியவர்கள் "தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது" என்று சொன்னார்கள். முழு ஹதீஸை அறியக் காண்க: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், 2:1354; 3:3055; 6:6173, 6174.


​இதைப் போன்றே அவனிடம் இருந்து ஏற்பட்ட மற்றொரு நிகழ்ச்சியும் சான்றாகும். அதாவது இப்னு ஸய்யாதுக்குக் கோபம் வந்தால் (அவனது உடல் ஊதிப்போய் விடும்.) அவன் நடந்துவரும் பாதையை முழுமையாக அவன் உடல் அடைத்துக் கொள்ளும்.⁷⁵ 

​75. நூல்: ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னது அஹ்மத்

அப்போது அவனை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அடிப்பார்கள்.

​அவ்வாறே தஜ்ஜால் எனும் மகா பொய்யனால் ஏற்படும் ஏராளமான அற்புதச் செயல்கள் குறித்து இடம்பெற்றுள்ள நபிமொழிகளும் இதற்குச் சான்றாகும்.

​அதாவது அவன் மழை பெய்யுமாறு வானத்திற்கு உத்தரவிட்டால் அது மழையைப் பொழியும். பூமியைப் பார்த்துப் பயிரை முளைவிக்கச் சொன்னால் அது முளைவிக்கும். பூமியின் கருவூலங்கள் அவனைத் தேனீக்களைப் போன்று பின்தொடர்ந்து செல்லும். அவன் இளைஞன் ஒருவனைக் கொன்று விட்டுப் பின்னர் அவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இவை போன்ற திடுக்கிடச் செய்யும் செயல்கள் பலவற்றை அவன் செய்து காட்டுவான்.

​இதனால்தான் லைஸ் பின் ஸஅத் (ரஹ்) அவர்கள், "ஒரு மனிதர் நீரில் நடப்பதையோ, விண்ணில் பறப்பதையோ நீங்கள் பார்த்தால் அவரது நடத்தையை குர்ஆன் மற்றும் நபிவழியோடு ஒத்துப்பார்க்காமல் அவர் குறித்து நீங்கள் ஏமாற்றம் அடைந்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.






Comments